முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாரத் பந்த்: எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பாதிப்பு

வெள்ளிக்கிழமை, 21 செப்டம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, செப். 21 - டீசல் விலை உயர்வு, சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி, சமையல் எரிவாயு சிலிண்டருக்கு கட்டுப்பாடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய ஜனநாயக கூட்டணி, இடதுசாரி கட்சிகள் மற்றும் சமாஜ்வாடி கட்சி ஆகிய கட்சிகள் நடத்திய பாரத் பந்த்தால் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. ஒடிசா, மேற்கு வங்கம், பீகார் மற்றும் உத்தரபிரதேச மாநிலத்தின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ரயில் மற்றும் சாலை போக்குவரத்துக்கு இடையூறு செய்தனர். 

தேசிய ஜனநாயக கூட்டணி, இடதுசாரி கட்சிகள் மற்றும் சமாஜ்வாடி ஆகிய கட்சிகளின் ஆதரவோடு நேற்று நாடு தழுவிய பாரத் பந்த் நடைபெற்றது. குறிப்பாக டீசல் விலை உயர்வை கண்டித்து இந்த பந்த் நடைபெற்றது. மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டது தெரிந்ததே. இந்த கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் இன்று வெள்ளிக் கிழமை தங்களது பதவிகளை ராஜினாமா செய்கிறார்கள். தனது இந்த முடிவில் மாற்றமில்லை என்று மம்தாவும் திட்டவட்டமாக அறிவித்து விட்டார். 

இந்த நிலையில்தான் நேற்று நாடு முழுவதும் பாரத் பந்த் நடைபெற்றது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இதனால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. டெல்லியில் ஷீலாதீட்சித் தலைமையிலான காங்கிரஸ் அரசு பதவியில் இருந்து வருகிறது. அங்கும் கூட ஏராளமான மார்க்கெட்டுகள் மூடப்பட்டிருந்தன. சில இடங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மறியல் செய்தனர். ஆனாலும் வாகனப் போக்குவரத்து இயல்பாகவே இருந்தது. லட்சுமிநகர், டிபன்ஸ் காலனி, போகல் போன்ற பல பகுதிகளில் கடைகள் திறந்திருந்தன. அதே நேரம் கன்னாட்பிளேஸ், கரோல்பார்க், சந்திரிசவுக் போன்ற இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. புது டெல்லி ரயில் நிலையத்தில் ஆட்டோ டிரைவர்கள் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்டோக்களை இயக்கவில்லை. டெல்லியில் தனியார் பள்ளிக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. பாரதீய ஜனதா ஆதரவாளர்கள் பல இடங்களில் வாகன போக்குவரத்துக்கு இடையூறு செய்தனர். 

உ.பி. மாநிலம்:

உத்தரபிரதேச மாநிலத்தில் பல இடங்களில் சமாஜ்வாடி கட்சி மற்றும் பா.ஜ.க தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி ரயில்களை நிறுத்தினர். மதுரா, ஆக்ரா, வாரணாசி, அலகாபாத், லக்னோ ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ரயில்களை நிறுத்தி போராட்டம் நடத்தினர். ஆக்ரா, குவாலியர் நெடுஞ்சாலையில் டயர்களை கொளுத்தி வர்த்தகர்கள் போக்குவரத்துக்கு இடையூறு செய்தனர். உ.பி.யில் பல இடங்களில் முக்கிய மார்க்கெட்டுகள் மூடப்பட்டிருந்தன. 

மகராஷ்டிரம்:மகராஷ்டிரம் மாநிலத்தில் இந்த பந்துக்கு ஓரளவே ஆதரவு கிடைத்தது. காரணம் இந்த மாநிலம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருவிழாவின் காரணமாக சிவசேனா, மகராஷ்டிர நவநிர்மான் சேனா ஆகிய கட்சியை சேர்ந்தவர்கள் பந்த்தில் கலந்து கொள்ளவில்லை. பீகார் மாநிலம் பாட்னாவில் பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான ரவிசங்கர் பிரசாத் மற்றும் சி.பி. தாகூர் ஆகியோர் போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டனர். மேலும் பல எதிர்க்கட்சி தலைவர்களும் இங்கு கைது செய்யப்பட்டுள்ளனர். 

பஞ்சாப்:

பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் இந்த பந்த் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. நீண்டதூரம் செல்லும் பஸ்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக இந்த நடவடிக்கையை அரசு மேற்கொண்டிருந்தது. இந்த பந்த்தையடுத்து சண்டிகரில் பல தனியார் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டிருந்தன. கடைகள், வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தன. பஞ்சாபில் ரயில் சேவை மட்டும் இயல்பாக இருந்தது. விமானங்கள் வழக்கம் போல் இயங்கின. இருந்தாலும் அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரசின் அழைப்பை ஏற்று லாரிகள் இம்மாநிலத்தில் ஓடவில்லை.

மேற்கு வங்கம்:

இடதுசாரிகள் இங்கு அழைப்பு விடுத்த 12 மணி நேர பந்த்துக்கு ஆதரவு கிடைத்தது. கொல்கத்தாவில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கிழக்கு ரயில்வே மற்றும் தென் கிழக்கு ரயில்வேயில் ரயில் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஹவுராவுக்கு செல்லும் ரயில்கள் மற்றும் அங்கிருந்து புறப்பட்ட ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தால் காலை 8.30 மணி வரை கடும் பாதிப்பு ஏற்பட்டது. பல ரயில் நிலையங்களில் பந்த் ஆதரவாளர்கள் ரயில் தண்டவாளங்களில் மறியல் போராட்டம் நடத்தினார்கள். இருப்பினும் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்படவில்லை. விமானங்களும் வழக்கம் போல் இயங்கின. சாலைகளிலும் வாகன போக்குவரத்து அதிகமாக காணப்படவில்லை. இருப்பினும் அரசு பஸ்கள் வழக்கம் போல் இயங்கின. கல்வி நிறுவனங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. அசம்பாவிதமான சம்பவங்கள் ஏதும் நடைபெறவில்லை. 

ஒடிசா:ஒடிசாவில் மக்களின் இயல்பு வாழ்க்கை இந்த பந்த்தால் பாதிக்கப்பட்டது.  ரயில் போக்குவரத்து, சாலை போக்குவரத்து ஆகியவை பாதிக்கப்பட்டன. அரசு அலுவலகங்கள், வங்கிகள், இன்சூரன்ஸ் அலுவலகங்கள் மூடப்பட்டிருந்தன. அதே போல் பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. இம்மாநிலத்தில் நடக்கும் ஒரு திருவிழாவும் இதற்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. புவனேஸ்வரம், கட்டாக் உள்ளிட்ட பல ரயில் நிலையங்களில் 12 க்கும் மேற்பட்ட ரயில்கள்நிறுத்தப்பட்டன. இந்த பந்த்தையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்திருந்தனர். பந்த் அமைதியாக நடந்ததாகவும், அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடக்கவில்லை என்றும் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.   

தமிழ்நாடு:

தமிழ்நாட்டில் இந்த பந்த்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் கலந்து இருந்தது. மாநிலம் முழுவதும் எந்த ஒரு அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை. அரசு பஸ்கள் வழக்கம் போல் இயங்கின. இடதுசாரி யூனியன்களை சேர்ந்த ஆட்டோக்கள் இயங்கவில்லை. மற்றபடி இதர ஆட்டோக்கள் வழக்கம் போல் செயல்பட்டன. பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் வழக்கம் போல் திறந்திருந்தன. அரசு அலுவலகங்களிலும் பணிகள் நடைபெற்றன. விமான சேவையில் மட்டும் சிறிய பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

சென்னை கோயம்பேட்டில் கிட்டத்தட்ட 3,000 காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகள் அனைத்தும் நேற்று மூடப்பட்டிருந்தன. அனைத்து மாவட்டங்களிலும் பஸ்கள் வழக்கம் போல் இயங்கின. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில கடைகள் மூடப்பட்டிருந்தன. பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக தெரியவில்லை. அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்