26-​முதல் அமெரிக்க விசா வழங்குவதில் புதிய நடைமுறை

சனிக்கிழமை, 22 செப்டம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

சென்னை, செப்.23 -​அமெரிக்கா செல்வதற்கான விசா வழங்குவதில் புதிய நடைமுறை 26-​ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஆன்​லைனில் விண்ணப்பிக்க புதிய இணையதளம் உருவாக்கப்பட்டு உள்ளது. தமிழில் தகவல் தர `கால்​சென்டர்' அமைக்கப்படுகிறது. இனிமேல், விசாவை நேரிலே போய் பெற்றுக்கொள்ளலாம்.

இதுகுறித்து சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தின் பொதுவிவகாரத் துறை அதிகாரி டேவிட் ஜே.கேய்னர் கூறியதாவது:-​

அமெரிக்காவுக்கு சென்று மேற்படிப்பு படிக்கவும், வேலை பார்க்கவும், சுற்றுலா செல்லவும் சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் விசா வழங்கி வருகிறது. இந்த விசா வழங்குவதில் புதிய நடைமுறையை அமெரிக்க நாடு அறிவித்துள்ளது. புதிய நடைமுறை வரும் 26-​ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் அதே நாளில் புதிய நடைமுறை கொண்டு வரப்படுகிறது.

விசாவுக்காக ஆன்​லைனில் விண்ணப்பிக்க புதிய இணையதளம் உருவாக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்திலோ, ஆவணங்கள் சமர்ப்பிப்பதிலோ, நேர்காணல் நடத்துவதிலோ எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

விசா கோரி விண்ணப்பிப்பவர்களுக்காக அமெரிக்க துணை தூதரகத்திற்கு வெளியே, சென்னை நகரின் மைய பகுதியில், துணை தூதரகத்தின் அங்கீகாரத்துடன், அனைத்து வசதிகளுடன்கூடிய ஒரு உதவி மையம் (பெசிலிட்டேசன் சென்டர்) அமைக்கப்படுகிறது. இங்கே விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட்டு, அவர்களது விரல் ரேகை பதிவு செய்யப்படும். மனுதாரரின் புகைப்படங்களை பெற்றுக்கொண்டு அங்கேயே அவர்களது ஆவணங்களும் சரிபார்க்கப்படும். இந்த பணிகள் அனைத்தும் ஒரேநாளில் முடிக்கப்படும்.

நேரில் விசா கிடைக்கும்

மறுநாள் அமெரிக்க துணை தூதரகத்தில் நேர்காணல் நடத்துவார்கள். அதையடுத்து, 5 வேலை நாட்களுக்கு பிறகு விசா வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள், தங்களது விசா தயாராகிவிட்டதா? இல்லையா? என்பதை மேற்கண்ட இணையதளத்தில், விண்ணப்ப படிவத்தின் எண்ணைக்கொண்டு விசாவின் நிலையை தெரிந்து கொள்ளலாம். விசா தயார் என்ற தகவலை பார்த்தவுடன் துணை தூதரகத்திற்கு நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம். இப்போது உரிய தொகையை வசூலித்துக்கொண்டு கூரியர் மூலம் விசாவை அனுப்புகிறார்கள். 26-ந் தேதிக்கு பிறகு நேரில் சென்று விசா வாங்கிக்கொள்ளலாம்.

புதிய நடைமுறையின்படி, விசா தொடர்பான தகவல்களைத் தெரிவிப்பதற்காக புதிதாக `கால்​சென்டர்' அமைக்கப்படுகிறது. இந்த மையம், திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். கட்டணமில்லா தொலைபேசியில் இந்த மையத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

இப்போது, துணை தூதரகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவல்களை ஆங்கிலத்தில் மட்டுமே பெற முடிகிறது. 26-​ந் தேதியில் இருந்து கால்​சென்டரை கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல் தமிழிலும் தகவல்களைக் கேட்டுப்பெற முடியும். தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 6 மொழிகளில் தகவல் பெறும் வசதி செய்யப்பட்டு உள்ளது.

சென்னையில் உள்ள துணை தூதரகத்தில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசா விண்ணப்பங்கள் ஆன்​லைனில் பதிவு செய்யப்படுகின்றன. உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க துணை தூதரகங்களில் சென்னையில் இருக்கும் துணை தூதரகத்தில்தான் அதிக எண்ணிக்கையில் விசா வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் 7 லட்சம் விசாக்கள் வழங்கப்பட்டன. இவ்வாறு அவர் கூறினர்.

அமெரிக்க துணை தூதரகத்தின் மக்கள் தொடர்பு பிரிவு தகவல் அதிகாரி ஆனந்த் கிருஷ்ணாவும் உடனிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: