முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டீசல் விலை உயர்வு - அன்னிய முதலீடு: பிரதமர் விளக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 23 செப்டம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, செப். 23 - டீசல் விலை உயர்வு, சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு ஆகிய அனைத்து நடவடிக்கைகளுமே மக்களின் வளமான எதிர்காலத்துக்குத்தான் என்று பிரதமர் மன்மோகன்சிங் விளக்கம் அளித்துள்ளார். தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் பிரதமர் மன்மோகன்சிங் பேசியதாவது, 

பொருளாதார நிலை சிரமமாக இருக்கும் போதும், நிதிப் பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்கவும் சில சீர்திருத்த நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாகி விடுகிறது. மக்கள் மீது சுமையை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எந்த அரசுக்கும் இருக்காது. அதேசமயத்தில் மக்களின் எதிர்கால நலனை பாதுகாப்பதும், தேச நலனை பாதுகாப்பதும் அரசாங்கத்தின் கடமை ஆகும்.

நமது தேசத்தின் நலனை பாதுகாக்க சில நடவடிக்கைகளை எடுத்தே ஆக வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.

டீசல் விலை உயர்வு, சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு ஆகிய விஷயங்களை முன்வைத்து நமது பொருளாதாரத்துக்குப் பெரும் ஆபத்து என்பது போல் பீதியைக் கிளப்புபவர்களை நம்ப வேண்டாம். இப்போது எழுப்பப்படும் கவலைகள் அடிப்படையற்றவை. நாட்டின் கடினமான பொருளாதார நிலைமையில் இவை அவசியமாகின்றன. வளமான எதிர்காலத்துக்கு கசப்பான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது.

நமக்குத் தேவையான கச்சா எண்ணெயில் 80 சதவீதத்தை நாம் இறக்குமதி செய்ய வேண்டியிருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நமது மக்களுக்கு இன்னல் தரக் கூடாதென்பதால், அதே அளவுக்கு இங்கு விலை உயர்த்தப்படவில்லை. கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை உயர்த்தாததால் எண்ணெய்த் துறை மானியமாக ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம் கோடியை ஒதுக்க வேண்டி வந்தது.இந்த ஆண்டு அது ரூ. 1 லட்சத்து 60 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும். டீசல் விலையை உயர்த்தாவிட்டால் அது ரூ. 2 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கும். டீசல் வகையில் ஏற்படும் நஷ்டத்தை தவிர்க்க அதன் விலையை ரூ. 17 உயர்த்தியிருக்க வேண்டும். ஆனால் வெறும் ரூ. 5 தான் உயர்த்தப்பட்டுள்ளது என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்