முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பரங்குன்றத்தில் குமரருக்கு வேல் எடுக்கும் திருவிழா

சனிக்கிழமை, 13 அக்டோபர் 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

திருப்பரங்குன்றம், அக். 13 - திருப்பரங்குன்றத்தில் மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் திருவிழா நேற்று வெகு சிறப்பாக  நடந்தது. முருகப்பெருமானின் முதல்படை வீடு எனும் சிறப்பு பெற்ற திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது, மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் திருவிழா ஆகும். நக்கீரருக்கு சாபவிமோசனம் கொடுப்பதற்காக முருகப்பெருமான் தனது கரத்திலுள்ள வேல் கொண்டு மலைமேல் பாறையில் கீறி கங்கைக்கு நிகரான புனித தீர்த்தத்தை உண்டாகிய நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையிலும், மழை வேண்டியும் ஆண்டாண்டு காலமாக புரட்டாசி மாதத்தில் இத் திருவிழா நடைபெற்று வருகிறது. 

விழாவை முன்னிட்டு, நேற்று காலை கோயில் மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை, சசத்திய கிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகைக்கு பூஜைகள் தீபாராதனைகள் நடந்தன. சுப்பிரமணிய சுவாமி கரத்திலுள்ள தங்க வேலுக்கு சிறப்பு அபிஷேகங்கள் முடிந்து மாலை, பட்டு சாத்துப்படியாகி பல்லக்கில் எழுந்தருளச் செய்யப்பட்டது. வீதி உலா முடிந்து, மலைமேல் கொண்டு செல்லப்பட்ட வேல், அங்குள்ள சுப்பிரமணியர் கரத்தில் சாத்துப்படி செய்யப்பட்டது. உச்சிகால பூஜையின் போது, காசிவிஸ்வநாதர் கோயிலுக்குமுன்பு உள்ள என்றும் வற்றாத சுனை தீர்த்தத்தில், வேலுக்கு 16 வகையான திரவிய அபிஷேகங்கள் நடந்தன.

கிராமத்தினர் சார்பில் 105 படி அரிசியில் கதம்ப சாதம் சுவாமிகள் முன்பு படைக்கப்பட்டு, பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மாலையில் மலை அடிவாரத்திலுள்ள பழனி ஆண்டவர் கரத்தில் வேல் சாத்துப்படி செய்யப்பட்டது. பழனி ஆண்டவர், வேலுக்கு அபிஷேக, ஆராதனைகள், பூஜைகள் தீபாராதனைகள் முடிந்து, பூப்பல்லக்கில் வேல் புறப்பாடாகி, வீதி உலா முடிந்து, மூலவர் சுப்பிரமணிய சுவாமி திருக்கரத்தில் மீண்டும் வேல் சேர்ப்பிக்கப்ட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்