முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நித்தியானந்தா நீக்கம்குறித்து மதுரைஆதினம் அரசுக்கு தெரிவிக்கவில்லை

புதன்கிழமை, 31 அக்டோபர் 2012      ஆன்மிகம்
Image Unavailable

சென்னை, ஆக.- 31 - மதுரை ஆதினத்தில் இருந்து நித்தியானந்தா நீக்கப்பட்டது குறித்து இந்து அறநிலையத்துறைக்கு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மதுரை ஆதினத்தின் இளைய மடாதிபதியாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை நீதிபதி பானுமதி, சுப்பையா ஆகியோர் விசாரித்து தீர்ப்பை ஒத்திவைத்தனர். இந்த நிலையில் இளைய மடாதிபதி பொறுப்பில் இருந்து நித்தியானந்தா நீக்கப்பட்டதாக மதுரை ஆதினம் அருணகிரிநாதர் அறிவித்தார். இது தொடர்பான செய்தி பத்திரிகைகளில் வெளியானது. இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து சில விளக்கங்கள் பெறுவதற்கு நீதிபதிகள் நேற்று மீண்டும் விசாரித்தனர். அப்பொழுது நித்தியானந்தா சார்பில் ஆஜரான வக்கீல் ஜி.ராஜகோபால், இளைய மடாதிபதி பொறுப்பில் இருந்து நித்தியானந்தாவை நீக்கிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக நித்தியானந்தாவுக்கு தெரிவிக்கப்படவில்லை. ஓரிரு நாட்களில் அந்த தகவல் வரும் என்று எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்தார். மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் என்.ஆர்.சந்திரன், நித்தியானந்தா நீக்கப்பட்டது குறித்து பத்திரிகை வாயிலாகவே அறிவிப்பு வந்துள்ளது. அவர் உண்மையாக நீக்கப்பட்டாரா? என்பதை கண்டறிய வேண்டும் என்று தெரிவித்தார். அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், அரசு வக்கீல் இன்பதுரை ஆகியோர் ஆஜராகி மதுரை ஆதினத்தை அரசு ஏற்றுக்கொள்வதற்காக அறநிலையத்துறை சார்பில் மதுரை கோர்ட்டில் சிவில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நித்தியானந்தா நீக்கப்பட்டது குறித்து அறநிலையத்துறைக்கு மதுரை ஆதினம் மூலமாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று தெரிவித்தனர். இவர்களது கருத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை இன்று விசாரிப்பதாக தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்