முக்கிய செய்திகள்

பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்

புதன்கிழமை, 13 ஏப்ரல் 2011      தமிழகம்
Ramakrishnan 2

 

சென்னை, ஏப்.13 - விக்கிரவாண்டி பேரூராட்சித் தலைவர் படுகொலை சம்பவத்தில் விழுப்புரம் அ.தி.மு.க. வேட்பாளர் சி.வி.சண்முகம், விக்கிரவாண்டி வேட்பாளர் ஆர்.ராமமூர்த்தி ஆகியோர் மீது களங்கம் கற்பிக்கும் விதமாக அறிக்கை வெளியிட்டுள்ள தி.மு.க. அமைச்சர் பொன்முடி விடுத்துள்ள அறிக்கை குறித்து தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சி.பி.எம். மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.  

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட விக்கிரவாண்டி பேரூராட்சி தலைவர் அர்ஜூனன் இன்று (12.4.2011) கோரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடந்த கொலைக்கு பழி தீர்க்கும் செயலாகவே இந்த கொலை நடந்திருப்பதாக மக்கள் கருதுகின்றனர். 

மேற்படி கொலை முழுக்க, முழுக்க தனிநபர் விரோதம் சார்ந்தது எனவும், இரண்டு கோஷ்டிகளுக்கு இடையிலான மோதல் எனவும் மக்கள் கருதக்கூடிய நிலையில், அரசியல் ஆதாயம் தேடும் நோக்கத்தோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விக்கிரவாண்டி தொகுதி வேட்பாளர்​வழக்கறிஞர் ஆர்.ராமமூர்த்தி மீதும், அ.இ.அ.தி.மு.க.வின் மாவட்ட செயலாளரும், விழுப்புரம் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளருமான சி.வி.சண்முகத்தின் மீதும் அவதூறு பரப்பும் நோக்கத்தோடு அமைச்சர் க.பொன்முடி அறிக்கை விடுத்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. 

13.4.2011 அன்று நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் மகத்தான முறையில் வெற்றி பெறும் வாய்ப்பை பெற்றுள்ள  அ.இ.அ.தி.மு.க. அணியையும், அதன் வேட்பாளர்களையும் களங்கப்படுத்தும் நோக்கத்தோடு செய்தியாளர்களுக்கு க.பொன்முடி பேட்டி அளித்துள்ளார். இவர் மீது கடுமையான  நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.  பொன்முடியின் ஆத்திரமூட்டும் பொய்யான அறிக்கையை புறக்கணித்து நமது அணியின் வேட்பாளர்கள் வெற்றிக்காக தீவிரமாக செயல்பட வேண்டுமென அ.தி.மு.க. அணியின் செயல்வீரர்களை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: