தேர்தல் களப் பணியாளர்களுக்கு ஒபாமா கண்ணீர்மல்க நன்றி

சனிக்கிழமை, 10 நவம்பர் 2012      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், நவ. - 10 - தேர்தல் பிரச்சாரத்தில் தனக்கு ஆதரவாக பணியாற்றியவர்களுக்கு நன்றி தெரிவித்தபோது அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அழுது விட்டார். பாரக் ஒபாமா இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளார். இந்நிலையில் தேர்தல் முடிவுகள் வருவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு ஒபாமாவின் தேர்தல் பிரச்சாரக் குழு அவருக்கு ஆதரவாக பணியாற்றிவர்களுக்கு ஒபாமா உணர்ச்சி பொங்க நன்றி தெரிவிக்கும் யூ.டியூப் வீடியோ ஒன்றை வெளியிட்டது. அந்த வீடியோவில் ஒபாமா கூறியிருப்பதாவது, நீங்கள் எனக்காக ஆற்றிய பணி, என்னுடைய வேலை மிகவும் முக்கியம் என்பதை உணர்த்துகிறது. உங்கள் வேலையைப் பார்த்து பெருமைப்படுகிறேன். உங்கள் அனைவரையும் பார்த்து பெருமையாக உள்ளது என்று கூறியவுடன் ஒபாமா கண்ணில் இருந்து கண்ணீர் பொங்கி அவரது கன்னங்களில் வழிந்தது. இந்த வீடியோ டுவிட்டர் மற்றும் இமெயில் மூலம் தேர்தல் களப் பணியாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. எப்பொழுதும் உணர்ச்சிகளை அவ்வளவாக வெளிப்படுத்தாதவர் என்று குற்றம் சாட்டப்பட்ட ஒபாமா தற்போது கண்ணீர் மல்க நன்றி கூறியுள்ளது பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. முதல் முறையாக அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட போதும் பிரச்சாரத்தின் இறுதியில் ஒபாமா கண்ணீர் சிந்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: