முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் உத்தரவின் பேரில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்

வெள்ளிக்கிழமை, 21 டிசம்பர் 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, டிச.21 - `துப்பாக்கி' படத்தில் உள்ள சர்ச்சைக்கு உரிய காட்சிகளை முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் நீக்கப்பட்டன என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு சிறப்பு வழக்கறிஞர் ஐ.எஸ்.இன்பதுரை கூறினார். சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த டி.அப்துல்ரஹீம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நான் இந்திய தேசிய லீக் கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கிறேன். கடந்த நவம்பர் 13-ம் தேதி கலைப்புலி தாணு தயாரிப்பில் நடிகர் விஜய் நடித்த துப்பாக்கி என்ற சினிமா படம் வெளியானது. அந்த படத்தில் முஸ்லிம் மக்களை தீவிரவாதியாக சித்தரிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. 

இந்த காட்சிகள் படத்தில் இருந்தால் மற்ற சமுதாயத்தினருக்கும், முஸ்லிம் இளைஞர்களுக்கும் இடையே விரோத உணர்வு ஏற்படும். இதனால் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை எழக்கூடும். இந்த படத்திற்கு `யு' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த சினிமாவில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளால் சமுதாய அமைதி கெட்டுவிடும். 

இது சம்பந்தமாக மத்திய அரசு தணிக்கைத்துறை மற்றும் சென்னை போலீஸ் கமிஷனருக்கு புகார் கொடுத்தேன். என் புகாரை பதிவு செய்து கொண்டு படச்சுருள்களை கைப்பற்றி இருக்க வேண்டும். ஆகவே புகாரை பதிவு செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஆர்.பானுமதி மற்றும் கே.கே.சசிதரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது அரசு தரப்பு வழக்கறிஞர் ஐ.எஸ்.இன்பதுரை ஆஜராகி தமிழக முதல்வரிடத்தில் முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்தவர்கள் துப்பாக்கி படத்தில் முஸ்லிம் சமூகத்தினரை தவறாக சித்தரித்து சில காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை பரிசீலித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர்  தெரிவித்து, உடனே நடவடிக்கை எடுத்து அந்த சர்ச்சையான காட்சிகளை படத்திலிருந்து நீக்கி விட்டனர். அந்த காட்சிகளை நீக்கியதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு முஸ்லிம் அமைப்புகள் நன்றி தெரிவித்துள்ளன என்று வாதிட்டார். 

அதற்கு நீதிபதிகள், மனுதாரர் வக்கீலை பார்த்து நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள் என்று கேட்டார். மனுதாரர் வழக்கறிஞர் மஞ்சுளா, படத்தில் சில காட்சிகள் எடுத்தது உண்மைதான். ஆனால் எந்த காட்சிகள் என்ற விபரம் கலைப்புலி தாணுவுக்கு தான் தெரியும். அவர் ஊரில் இல்லை என்றார். 

அதற்கு நீதிபதிகள், மனுதாரர் காட்சிகள் நீக்கியது தொடர்பான விவரங்களை பதில் மனுவாகவும், நடந்தது என்பதை பற்றி தமிழக அரசு பதில் மனுவையும் வரும் 3.1.2013 அன்று தாக்கல் செய்ய உத்தரவிட்டு, இந்த வழக்கையும் அதே தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!