முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கையில் கோயில்கள் இடிப்பு: கருணாநிதி கண்டனம்

புதன்கிழமை, 13 பெப்ரவரி 2013      அரசியல்
Image Unavailable

 

சென்னை, பிப்.14 - இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் இருந்த 367 இந்துக் கோயில்களை இலங்கை அரசு இடித்துள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கையில் தமிழர்கள் வாழும் 89 கிராமங்களுக்கு இருந்த தமிழ்ப் பெயர்களையெல்லாம் சிங்களப் பெயர்களாக மாற்றியதைப் பற்றி நான் முன்னரே ஆதாரங்களோடு விரிவாக எடுத்துக் கூறியிருக்கிறேன். தற்போது இலங்கையில் 367 இந்துக் கோவில்களை இடித்துள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளி வந்துள்ளன. இந்தச் செய்தியினை இண்டர்நேஷனல் பாலிசி டைஜஸ்ட் என்ற இதழ் விரிவாக வெளியிட்டுள்ளது. தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் உள்ள கோயில்கள் உட்பட அனைத்து நினைவுச் சின்னங்களையும் ஒழிப்பது என்கிற கொள்கை முடிவினை ராஜபக்சே அரசு எடுத்திருப்பதாகவும், தமிழர்கள் வாழ்ந்த இடங்களின் அடையாளங்கள் அனைத்தையும் அழித்து விட்டு, அந்த இடங்களில் சிங்களவர் குடியிருப்புகளை ஏற்படுத்தும் பணியினைச் செய்து வருவதாகவும், யாழ்ப்பாணத்தில் மட்டும் 208 கோயில்கள் இதுவரை தரைமட்டமாக்கப்பட்டுள்ளன என்றும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் அடுத்த மாதம் அமெரிக்கா கொண்டு வரவிருக்கின்ற தீர்மானத்தின் மூலமாகவாவது விடிவு காலம் ஏற்படுமா என்பது தான் நம்முடைய இன்றைய கவலையாகும். மேலும், இலங்கை அரசு தொடர்ந்து செய்து வரும் மனித உரிமை மீறல்களைக் கண்டிக்கும் வகையில், இலங்கையில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்திடத் திட்டமிடப்பட்டுள்ள 'காமன்வெல்த்' மாநாட்டை, வேறொரு நாட்டில் நடத்த வேண்டுமென நியூயார்க்கில் உள்ள சர்வதேச மனித உரிமை அமைப்பு, காமன்வெல்த் தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடருவதால், காமன்வெல்த் மாநாட்டினைப் புறக்கணிக்கப் போவதாக கனடா போன்ற நாடுகள் எச்சரித்துள்ளன. இந்தச் செய்திகள் எல்லாம் இலங்கை ராஜபக்சே அரசின் கொடுமைகளை உலக நாடுகள் புரிந்து கொள்ளத் தொடங்கியிருக்கின்றன என்பதை உணர்த்துவதால், அது நமக்கு நம்பிக்கை அளிக்கின்றது. உலகநாடுகளும், உலக அமைப்புகளும் இலங்கையில் நடைபெற்ற​ மனித உரிமை மீறல்களையும், ராஜபக்சே அரசு புரிந்திருக்கும் வரலாறு காணாத போர்க் குற்றங்களையும் புரிந்து கொண்டு இலங்கை அரசின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தீர்மானித்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. . சர்வதேச அளவில் இலங்கைக்கு உதவி செய்யும் நாடுகள் இலங்கை அரசின் திட்டங்களைத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளன.  ஜெனீவா நகரில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரத் திட்டமிட்டுள்ள தீர்மானத்தை முனை மழுங்கச் செய்திடும் முயற்சியில் இலங்கை அரசு சாதுர்யமாக ஈடுபடத் தொடங்கியுள்ளது . இலங்கை அதிபர் ராஜபக்சே எப்படிப்பட்ட தந்திரோபாயங்களைக் கையாண்ட போதிலும், உலக நாடுகளின் கண்டனத்திலிருந்தும், தண்டனையில் இருந்தும் தப்பி விட முடியாது என்பதே உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் நம்பிக்கையாகும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்