முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மரண தண்டனையை ஒழிக்க முன்னாள் நீதிபதி வற்புறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2013      இந்தியா
Image Unavailable

 

திருவனந்தபுரம், பிப்.18 - மரண தண்டனையை அடியோடு ஒழிக்க வேண்டும் என்று  முன்னாள் நீதிபதி கிருஷ்ணய்யர் வற்புறுத்தியுள்ளார். மரண தண்டனையை ஒழிப்பது பற்றி அவர் கூறியதாவது:

மரண தண்டனை மனித நேயத்துக்கு முற்றிலும் முரணானது. எனவே அதை சட்டப் புத்தகத்திலிருந்தே நீக்கி விட வேண்டும் என்று தேட்டுத்கொள்கிறேன். மரண தண்டனை என்பது கொலைதான். இதற்கு எதிராக அனைத்து நாடுகளும் அணி திரள வேண்டும். ஏற்கெனவே 90 சதவீத நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டது. கடவுளால் அருளப்பெற்ற உயிரைப் பறிக்கும் உரிமை யாருக்கும் கிடையாது. மனித உயிரை அரசே பறிப்பது மனித நேயத்துக்கு முற்றிலும் புறம்பானதாகும்.

மகாத்மா காந்தி பிறந்த தேசத்தில் மரண தண்டனை அறவே ஒழிக்கப்பட வேண்டும்.நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தாலும் கூட அதை அரசு நிறைவேற்றக் கூடாது.  இனிமேல் யாருக்கும் தூக்குத் தண்டனையை நிறைவேற்றாதீர்கள் என்று ஜனாதிபதியையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளையும்கேட்டுக்கொள்கிறேன்.

நான் எப்போதும் மரண தண்டனையை எதிர்த்தே வந்துள்ளேன்.நீதிபதி என்ற முறையில் நான் எழுதிய தீர்ப்புகளை பல நீதிபதிகள் மேற்கோள் காட்டி வந்துள்ளனர்.

நீதிபதி ஸ்கேர்மன் பிரிவி கவுன்சிலில் எனது  தீர்ப்பை மேற்கோள் காட்டியுள்ளார். இதேபோல் ஹியூமன் ரைட்ஸ் அண்ட் த லா என்ற தலைப்பில் நான் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள வாசகங்களை லார்டு டென்னிங் மேற்கோள் காட்டியுள்ளார். மரண தண்டனை அறவே ஒழிக்கப்படும் வரை மனித நேய ஆர்வலர்கள் ஓயக்கூடாது. எல்லா உயிர்களும் தெய்வத் தன்மை கொண்டவை. எனவே நமது பார்வை மேன்மையானதாக இருக்க வேண்டும். நமது செயல்பாடு உன்னதமானதாக இருக்க வேண்டும்.

மரண தண்டனையை ஒழித்தால்தான் நாம் மனித நேயம் கொண்டவர்களாக இருக்க முடியும். எனவே மரண தண்டனையை ஒழிக்க அனைவரும் ஒருமித்த குரலை எழுப்ப வேண்டும் என்றுகிருஷ்ணய்யர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்