பிரபாகரன் மகன் கொலை:எதுவும் தெரியாது - பொன்சேகா

வியாழக்கிழமை, 21 பெப்ரவரி 2013      உலகம்
Image Unavailable

 

கொழும்பு, பிப். 22 - விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று பேசியுள்ளார் அப்போது ராணுவத்திற்குத் தலைமையேற்று தமிழர்கள் மீது வெறித்தாக்குதல் நடத்தியவரான முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா.

ராஜபக்சே கும்பலின் ஏவல்காரராக விளங்கியவர்தான் இந்த பொன்சேகா. பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் மிகக் கொடூரமாக கொல்லப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது குறித்து பொன்சேகா கருத்து தெரிவிக்கையில்,

2009 ம் ஆண்டு மே மாதம் 17, 18 மற்றும் 19 ஆகிய நாட்களில் இறுதிப் போர் நடந்தது. அப்போது 400 விடுதலைப்புலிகளின் உடல்கள் கைப்பற்றப்பட்டன. அதில் பிரபாகரன் மூத்த மகன் சார்லஸ் அந்தோணியின் உடலும் இருந்தது. சார்லஸ் அந்தோணி உடலை முன்னாள் தளபதி கருணா அடையாளம் காட்டினார். இளைய மகன் பாலச்சந்திரன் உடலை நாங்கள் கைப்பற்றவில்லை. அவருடைய மரணம் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. அதுபோல பிரபாகரனின் மனைவி மதுவதினி, மகள் துவாரகா பற்றியும் எங்களுக்கு தெரியாது. அவர்கள் யாருடைய உடலும் கைப்பற்றப்படவில்லை என்று கூறியுள்ளார் பொன்சேகா. பிரபாகரன் குறித்து அவர் எதுவும் சொல்லவில்லை. 

அதேசமயம், முள்ளிவாய்க்கால் பகுதி ராணுவப் பொறுப்பாளர் வசம் பிரபாகரன் குடும்பம் உயிருடன் சிக்கியதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதை அவர் மறுத்துள்ளார். விடுதலைப் புலிகள் தளபதி தீபன் என்பவரின் உடலை மட்டுமே எனது பிரிவினர் கைப்பற்றினர். மற்றவர்கள் குறித்துத் தெரியாது என்று அவர் கூறியுள்ளார். மொத்தத்தில் பிரபாகரன் குடும்பத்தினர் பற்றிய மிகப் பெரிய பரபரப்பான விஷயங்களை நோக்கி உலகம் நெருங்கி வருவதாகவே தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: