முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் கருணாநிதி இரட்டைவேடம்

புதன்கிழமை, 13 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.14 - இலங்கைத் தமிழர் பிரச்சனையில் கருணாநிதி இரட்டைவேடம் போட்டு நாடகமாடுகிறார் என்று நாஞ்சில் சம்பத் கடுமையாக தாக்கி பேசினார். சென்னை தேனாம்பேட்டை ஆலயம்மன் கோவில் அருகே நேற்று முன்தினம் இரவு முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. 114-வது வட்ட செயலாளரும், 117-வது வார்டு கவுன்சிலருமான ஆறுமுகம் என்கிற சின்னய்யா தலைமை வகித்தார். தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் வி.பி.கலைராஜன் எம்.எல்.ஏ முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் ஏழை, எளியவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.  தையல் எந்திரங்கள் மற்றும் சலவைப் பெட்டிகள், 3 சக்கர சைக்கிள்கள், மிக்சி மற்றும் கிரைண்டர்கள், கிரிக்கெட் மட்டைகள் இலவசமாக வழங்கப்பட்டன. 

இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசியதாவது:-

நாளை இந்திய நாட்டின் தலைமகளாக அரியணை ஏறப்போகிறவர் நம் முதல்வர். எல்லா மாதங்களுக்கும் 30 நாள், 31 நாள் உண்டு. ஆனால் பிப்ரவரிக்கு மட்டும் 28 நாள்தான். அந்த குறையை பிப்ரவரி மாதத்துக்கு  இல்லாமல் ஆக்கி பூரணத்துவம் வழங்கவே கடவுள் அம்மாதத்தில் அம்மாவை அவதரிக்க செய்திருக்கிறார்.

நமது முதல்வர் கடந்த ஆண்டு தமிழ்நாட்டை கருணாநிதி பிடியிலிருந்து  மீட்டார். இந்த ஆண்டு கர்நாடகத்தின் பிடியிலிருந்து காவிரியை மீட்டார். அடுத்த ஆண்டு காங்கிரசின் பிடியிலிருந்து இந்திய நாட்டை மீட்கப்போகிறார்.

காவிரியை மீட்டுத்தந்த நம் முதல்வருக்கு தஞ்சையில் பாராட்டு விழா நடந்ததை கருணாநிதியால் தாங்கி கொள்ள  முடியவில்லை. அடிவயிற்றில் இடித்து கொண்ட காந்தாரி போல அழுது புலம்பி அறிக்கை வெளியிட்டுள்ளார். மத்திய அரசில் அதிகாரம் படைத்தவராகவும், தமிழகத்தின் முதன் மந்திரியாகவும் இருந்தபோது கருணாநிதி காவிரி நீரை பெறுவதற்கு எதுவும் செய்யவில்லை.

அதுபோலத்தான் இலங்கைத் தமிழர் பிரச்சினையிலும் அதிகாரம் தன் கையில் இருந்தபோது, உதவுவதற்கு அவருக்கு மனம் இல்லை. தமிழ் இனப்படுகொலை நடந்ததை வேடிக்கை பார்த்தார். அப்படிப்பட்டவர் இன்றைக்கு இலங்கைத் தமிழர்கள் மீது அனுதாபப்படுகிறவர் போல நடிக்கிறார். இரட்டைவேடம் போட்டு நாடகமாடுகிறார் கருணாநிதி.

அவர் பந்த், அது இது என்று அறிவிப்பதை நம்ப மக்கள் தயாராக இல்லை. அதனால் அவருடைய பந்த் அவர் வீட்டு முன்னாலேயே கிடந்து விட்டது. அந்த பந்த் வீதிக்கு வரவில்லை. அது வெற்றி பெற முடியாமல் படுதோல்வி அடைந்து விட்டது.

கருணாநிதி தமிழகத்தின் முதல்வராக இருந்த காரணத்தால்தான் ராஜபக்சே தைரியமாக தமிழர்களை வேட்டையாடினான். அவன் கையில் கொலைவாளை எடுத்து கொடுத்தது டெல்லி. கருணாநிதி வேடிக்கை பார்த்தார். அப்போது மட்டும்  ஜெயலலிதா முதல்வராக இருந்தால் எப்படியும் இலங்கை இனப்படுகொலையை தடுத்து இருப்பார்.

இவ்வாறு நாஞ்சில் சம்பத் பேசினார்.

மேலும், அமைப்பு செயலாளர் சி.பொன்னையன், பகுதி செயலாளர் நுங்கைமாறன், கவுன்சிலர் யு.கற்பகம் ஆகியோரும் பேசினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்