முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

53 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு

வியாழக்கிழமை, 14 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

ராமேசுவரம்,மார்ச்.15 - ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 9படகுகளையும், 53மீனவர்களையும் இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றதால் ராமேசுவரம் பகுதியில் பதற்றம் நிலவுகிறது. மீனவர்களை இலங்கை கடற்படையினர் சரமாரியாக தாக்கி படுகாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 652 படகுகளில் மீனவர்கள் மீன்வளத்துறையுடன் மீன்பிடிக்க சென்றனர். இவ்வாறு சென்ற மீனவர்கள் இலங்கை தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது அந்தபகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் இரவு 4படகுகளையும், அதில் இருந்த 19 மீனவர்களையும் சிறைபிடித்து சென்று விட்டனர். இந்நிலையில் நேற்று அதிகாலை மீன்பிடித்துவிட்டு திரும்பி வந்த படகுகளை எண்ணியபோது ஐந்துக்கும் மேற்பட்ட படகுகள் கரைதிரும்பாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது, ராமேசுவரம் வேர்க்கோடு பகுதியை சேர்ந்த பொன்ராஜ் என்பவர் மட்டும் படகில் தனிஆளாக கரைதிரும்பியதைக்கண்டு மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து பொன்ராஜிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- நாங்கள் அனைவரும் தனுஷ்கோடி அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அந்த பகுதிக்கு மின்னல்வேகத்தில் இலங்கை கடற்படையினர் வந்தனர். அவர்கள் அனைவரும் எங்களின் படகுகளை சுற்றிவளைத்து பிடித்து துப்பாக்கியை காட்டி மிரட்டினர். அனைவரையும் படகுகளில் வரிசையாக நிற்கும்படி கூறியதோடு படகுகளின் என்ஜினை அணைத்தனர். இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கையால் ஆபத்தை உணர்ந்த மீனவர்கள் வயர்லெஸ் கருவி மூலம் தகவல் தெரிவிக்க முயன்றனர். இதைக்கண்ட இலங்கை கடற்படையினர் வயர்லெஸ் கருவிகளை பறித்துக்கொண்டு மீனவர்களை சரமாரியாக தாக்கினர். இதில் பல மீனவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், மீனவர்களின் செல்போன்களையும் பறித்துக்கொண்டனர். அந்த சமயம் பார்த்து நான் எனது படகின் என்ஜினை புத்திசாலித்தனமாக கயிறால் கட்டி  அணைத்து மீண்டும் இயக்க முடியாதபடி செய்து என்ஜின் இயங்காததுபோல நடித்தேன். இதனால் எனது படகு இயங்காமல் போனதால் ஆத்திரமடைந்த இலங்கை கடற்படையினர் எனது படகில் இருந்த 5மீனவர்களை மட்டும் அவர்களின் படகில் ஏற்றிக்கொண்டு என்னை துப்பாக்கியை காட்டி எச்சரித்து உயிர்பிழைத்தால்  திரும்பிபோ என்று கூறினர். இதைத்தொடர்ந்து 5படகுகளில் இருந்த 34 மீனவர்களையும் சிறைபிடித்து கொண்டு சென்று விரைந்து சென்று விட்டனர். அவர்கள் சென்றதும் நான் மீண்டும் படகின் என்ஜினை இயக்கி உயிர்பிழைத்தால் போதும் என்று கரைதிரும்பினேன். இவ்வாறு கூறினார். மீனவர் பொன்ராஜின் உடலில் இலங்கை கடற்படையினர் தாக்கியதற்கான ஊமைக்காய அடையாளங்கள் காணப்பட்டன. இதைக்கண்ட ராமேசுவரம் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதன்படி இலங்கை கடற்படையினர் ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தேவசகாயம், மோட்சஅலங்காரம், ராஜபாண்டி, விசுவாசம், மேக்சின்ராஜ் ஆகியோரின் 5படகுகளை சிறைபிடித்து சென்றது தெரியவந்துள்ளது. இந்த படகுகளில் இருந்த மரியநேசன், ஞானஅருள், மோசஸ், கிளிட்டன், இன்னாசி, கிரிங்சன், சந்தியா, சுதாகர், ஜான்பிரிட்டோ, ரீகன், ராஜ், கேம்லின், ஜேசுராஜா, ஸ்னேன், பிளமன், ஆரோக்கியதாஸ், ராபின்சன், சேசு, மேக்லின், மோனிஸ்டன், விஜயகுமார், அந்தோனி, சந்தியா, நாதன், துரை, பிரசாத், திவாகர், யாகோப், மகில்சன், அந்தோனி, நோபார்ட், காந்தி, சந்தியா, டெஸ்கோ ஆகிய 34 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இலங்கை நெடுந்தீவு காரைநகர் போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.  நேற்று பிடித்துச்சென்ற 4படகுகளில் இருந்த 19மீனவர்கள் அனைவரும் தலைமன்னார் போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீனவர்களிடம் இலங்கை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாக இலங்கை தலைமன்னார் பகுதியில் உள்ள மீனவர்கள், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதாகவும், இதனால், இலங்கை கடல்வளம் அழிந்துவருவதாகவும், இலங்கை கடற்படை தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றம்சாட்டி ஆர்ப்பாட்டத்தில் ்டுபட்டதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த இலங்கை கடற்படை தங்களின் செயல்பாட்டை காட்டுவதற்காக ராமேசுவரம் மீனவர்களை சிறைபிடித்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இலங்கை கடற்படையினரின் இந்த வெறிச்செயல் மீனவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து மீனவர்களை தாக்கி சிறைபிடித்து சென்றுவரும் இலங்கை அரசு மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். முன்எப்போதும் இல்லாத அளவிற்கு 9படகுகளையும், 53மீனவர்களையும் சிறைபிடித்து சென்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சிறை பிடிக்கப்பட்ட 19மீனவர்களும் தலைமன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரையும் இந்தமாதம் 28-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மீனவர்கள் 19பேரும் இலங்கை தலைமன்னார் அனுராதாபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர். இதேபோல, மற்ற மீனவர்கள் 34பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 15நாட்கள் சிறைகாவலில் வைக்க உத்தரவிடப்பட்டதைத்தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்