முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வியாபார பெருமக்களுக்கு பாதுகாப்பாக இருப்பார் முதல்வர்

ஞாயிற்றுக்கிழமை, 17 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,மார்ச்.18 - வியாபார பெருமக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா எப்போதும் பாதுகாப்பாக இருப்பார் என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.   மதுரை காபி,டீ, வர்த்தகர் சங்க வெள்ளிவிழா நேற்று நடந்தது. விழாவிற்கு சங்க தலைவர் எம்.எஸ்.முத்துமாணிக்கம் தலைமை வகித்தார். துணை தலைவர் முகம்மது முஹையுத்தீன் முன்னிலை வகித்தார். சங்க கவுரவ செயலாளர் எஸ்.பி.கே.சுகுமாறன் வரவேற்றார். துணை செயலாளர் ஆர்.கே.ராஜேஷ் ஆண்டறிக்கை படித்தார். நிகழ்ச்சியில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்து பேசியதாவது, நானும் ஒரு காபிடீ வர்த்தகர் என்ற முறையில் இந்த விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். மக்களை நேரிடையாக சந்திக்கும் தொழில் இந்த தொழில். அதிகாலையிலேயே நமது கடையிலேயே பேப்பரை வாங்கி படித்து விட்டு பொதுமக்கள் சொல்லும் கருத்துக்களை கேட்கும் வாய்ப்பு காபி,டீ கடை நடத்துபவர்களுக்கு மட்டும் தான் உண்டு. இங்கு முதல் தீர்மானமே முதல்வர் அம்மாவிற்கு நன்றிதெரிவித்து போடப்பட்டுள்ளது. சிலிண்டர் விலையை குறைப்பதற்காக வரியை குறைக்கும் படி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மத்தியில் ஆட்சியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு இல்லாததால் நாம் மிகுந்த சிரமப்பட்டு கொண்டிருக்கிறோம்.

     வியாபாரிகளுக்கு நான் என்றுமே உறுதுணையாக இருப்பேன். அரசிடம் சொல்லி என்ன சலுகைகள் பெற்றுத்தர முடியுமோ அதை செய்வேன். அம்மாவின் அரசு எப்போதும் உங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும். தற்போது ரவுடிகள் தொல்லையின்றி வியாபாரம் செய்து வருகிறீர்கள். முன்பு ஒரு நோட்டீசை கொண்டு வந்து பணத்தை கேட்டு மிரட்டுவார்கள். இப்போது அந்த தொல்லையெல்லாம் உங்களுக்கு இல்லை. ஏழை மக்கள் பொருளாதாரத்தில் உயர வேண்டும் என்பதற்காக முதல்வர் அம்மா தினமும் 20 மணி நேரம் உழைத்து வருகிறார். இந்தியாவில் உள்ள 26 மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. தற்போது மத்திய அரசில் அங்கம் வகிக்கும்  திமுக 19எம்பி சீட்களை வைத்துக்கொண்டு தமிழகத்திற்கு துரோகம் செய்து கொண்டு இருக்கிறது. 9 எம்பி சீட்களை மட்டும் நாம் வைத்துள்ளதால் மத்திய அரசை எதுவும் செய்ய முடியவில்லை. வரும் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுகவை வெற்றி பெற செய்தீர்களேயானால் நமக்கு வேண்டிய திட்டங்களை நாமே எடுத்துக்கொள்ளலாம். உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் அம்மாவிற்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

 இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் இரா.அண்ணாதுரை எம்எல்ஏ, நரசுஸ்காபி அதிபர் சிவானந்தம், வர்த்தக சங்க முதுநிலை தலைவர் ரத்தினவேல், தலைவர் ஜெகதீசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்