எல்லை தாண்டிய சிறுமியை ஒப்படைத்த பாக். ராணுவம்

செவ்வாய்க்கிழமை, 2 ஏப்ரல் 2013      இந்தியா
Image Unavailable

 

ஜெய்பூர், ஏப். 3 - எல்லை தாண்டி சென்ற 7 வயது இந்திய சிறுமியை, பத்திரமாக பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் கொடிக்கூட்டத்தில் இந்திய எல்லைப்படையினரிடம் ஒப்படைத்தனர். ராஜஸ்தான் மாநிலம் பிக்கானர் மாவட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் எல்லைப் பகுதி உள்ளது. அங்கு இந்திய எல்லையோரமாக விவசாயி ஒருவருக்கு சொந்தமான வயல் உள்ளது. கடந்த 29 ம் தேதி அந்த விவசாயி தனது 7 வயது மகள் பூஜாவை அழைத்துக்கொண்டு வயலுக்கு வந்தார். வயல் வேலைகளில் அவர் மும்முரமாக ்ஈடுபட்டிருந்தபோது, விளையாடிக்கொண்டிருந்த பூஜா, எல்லையோரமாக உள்ள வேலிக்குள் நுழைந்து பாகிஸ்தானுக்குள் சென்று விட்டதை விவசாயி கவனிக்கவில்லை. வேலை முடிந்து மகளை தேடியுள்ளார் தந்தை. வயல் முழுவதும் தேடிப்பார்த்தும் பூஜா கிடைக்கவில்லை. 

வேலியோரம் சென்று பார்த்த அவர், பூஜாவின் காலடித்தடம் பாகிஸ்தான் எல்லைக்குள் செல்வதை உறுதிப்படுத்திக்கொண்டு, இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினரிடம் இச்சம்பவம் குறித்து முறையிட்டு, தனது மகளை மீட்டுத் தர வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதனையடுத்து, இந்திய எல்லைப்படை ரேஞ்சர்கள், பாகிஸ்தான் எல்லைப்படை ரேஞ்சர்களுக்கு இத்தகவலை தெரிவித்து கொடி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார்கள். நேற்று முன்தினம் நடைபெற்ற கொடி கூட்டத்தில், இந்திய எல்லைப்படையினரிடம் பூஜா ஒப்படைக்கப்பட்டாள். அவளை பெற்றுக் கொண்ட தந்தை மகிழ்ச்சியால் ஆனந்தக் கண்ணீர் வடித்த காட்சி, அனைவரின் மனங்களையும் நெகிழச் செய்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்: