முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சல்மான் குர்ஷித்துடன் இத்தாலி பிரதமர் ஆலோசனை

சனிக்கிழமை, 6 ஏப்ரல் 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஏப். 7 - இத்தாலி கடற்படை வீரர்கள் மீதான வழக்கு தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்துடன் இத்தாலி பிரதமர் மரியோ மோண்டி தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார். இந்தியா வந்துள்ள இத்தாலி வெளியுறவு துறை துணை அமைச்சர் ஸ்டபாண்டி மிஸ்துரா மத்திய அமைச்சர் குர்ஷித்தை சந்தித்து பேசினார். நாட்டை விட்டு வெளியேற இத்தாலி தூதருக்கு விதித்திருந்த தடையை சுப்ரீம் கோர்ட் விலக்கிக் கொண்டுள்ள நிலையில் இத்தாலி கடற்படை வீரர்கள் மீதான வழக்கு விசாரணை குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். 

கடந்த மாதம் இவ்விருவரும் சந்தித்து பேசியதற்கு பிறகு கடற்படை வீரர்கள் மீதான வழக்கு விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து மிஸ்துராவுக்கு குர்ஷித் விளக்கியதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. முந்தைய விசாரணையின் போது சுப்ரீம் கோர்ட் கூறிய அறிவுரைப்படி சிறப்பு நீதிமன்றம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இது குறித்து வரும் 16 ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கவிருப்பதாகவும் குர்ஷித் அவரிடம் தெரிவித்தார். 

இவ்விருவரும் ஆலோசித்து கொண்டிருந்த நேரத்தில் இத்தாலி பிரதமரும், வெளியுறவு துறையை கவனித்து வருபவருமான மரியோ மோண்டி குர்ஷித்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது கடற்படை வீரர்கள் மீதான வழக்கு விசாரணை குறித்து இருவரும் ஆலோசித்ததாக தகவல்கள் கூறுகின்றன. 

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 15 ம் தேதி இத்தாலியின் என்ரிகா லெக்ஸி என்ற சரக்கு கப்பலில் இருந்த 2 கப்பற்படை வீரர்கள் கேரள மீனவர்கள் 2 பேரை சுட்டுக் கொன்றனர். இது தொடர்பாக அவர்கள் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே இத்தாலி தேர்தலில் பங்கேற்பதற்காக சுப்ரீம் கோர்ட் அனுமதி பெற்று தாயகம் திரும்பிய வீரர்களை இந்தியாவுக்கு அனுப்ப இத்தாலி அரசு மறுத்தது. இதையடுத்து இந்தியாவுக்கான இத்தாலி தூதர் நாட்டை விட்டு வெளியேற சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. இதனால் இத்தாலி வீரர்களை இத்தாலி திருப்பி அனுப்பியது. 

இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அல்தமஸ் கபீர் தலைமையிலான அமர்வு இத்தாலி தூதருக்கு விதித்திருந்த தடையை கடந்த 2 ம் தேதி ரத்து செய்தது. அப்போது இந்த விவகாரம் தொடர்பாக ஜனவரி 18 ம் தேதி பிறப்பித்த உத்தரவுப்படி சிறப்பு நீதிமன்றம் அமைக்காத மத்திய அரசுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்