முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாஸ்டன் வெடிப்பு: துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாதி பலி

வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2013      உலகம்
Image Unavailable

 

பாஸ்டன், ஏப். 20 - அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் மாரதான் போட்டியில் குண்டு வைத்தது தொடர்பாக தேடப்பட்டு வந்த ஒரு தீவிரவாதி போலீசுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பலியானான். மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர். முன்னதாக இந்த விவகாரத்தில் சந்தேகத்துக்குரிய இருவரது படங்களை அமெரிக்க விசாரணை அமைப்பான எப்.பி.ஐ வெளியிட்டது. சம்பவம் நடந்த பாஸ்டன் தெருவில் உள்ள சி.சி.டி.வி.க்களில் பதிவாகியுள்ள வீடியோக்களை வைத்து இரண்டு நபர்கள் மீது எப்.பி.ஐ. க்கு சந்தேகம் ஏற்பட்டது.

இந்த நிலையில் வாட்டர்டவுன் பகுதியில் காரில் வந்த ஒருவரை துப்பாக்கி முனையில் வழிமறித்த ஒருவன் அவரை காருடன் கடத்தினான். பின்னர் காரில் இருந்தவரை இறக்கி விட்டுச் சென்றான். இந்த விவரம் அறிந்த போலீசார் அந்தக் காரை விரட்டிச் சென்ற போது, அந்த நபர் காரில் இருந்து வெடிகுண்டுகளை வெளியே வீசினான். இதையடுத்து எப்.பி.ஐ. யும் போலீசாரும் அந்தக் காரை சுற்றி வளைத்தனர். அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் காரில் இருந்தவன் சுட்டுக் கொல்லப்பட்டான். 

பின்னர் தான் அவன் பாஸ்டன் மாரத்தான் குண்டு வெடிப்பில் தொடர்புடையவன் என்பது தெரியவந்தது. பலியானவன் படத்தில் கருப்புத் தொப்பியுடன் இருப்பவன் ஆவான். இந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய இன்னொரு நபரை (வெள்ளைத் தொப்பியுடன் இருப்பவர்) போலீசார் தேடி வருகின்றனர். இந்த நபரும் அந்தக் காரில் தான் இருந்ததாகவும், பின்னர் அவன் மட்டும் தப்பி விட்டதாகவும் தெரிகிறது.

பாஸ்டன் நகரில் கடந்த 15 ம் தேதி மராத்தான் ஓட்டப் பந்தயம் நடைபெற்ற போது அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்து 3 பேர் உயிர் இழந்தனர். 176 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த குண்டு வெடிப்பில் பலியானவர்கள் மார்ட்டின் ரிச்சர்டு (8), கிறிஸ்ட்லி காம்பெல் (29), சீனாவை சேர்ந்த மாணவர் லூ லிங்ஸி என்று தெரியவந்தது. இதில் காயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களில் 10 பேர் கை, கால்களை இழந்து விட்டனர். பலரது உடலில் புதைந்துள்ள வெடிகுண்டு துகள்கள், பால்பேரிங் குண்டு ஆகியவைகளை டாக்டர்கள் அகற்றினர். பலரது உடல்நிலை இன்னும் கவலைக்கிடமாகவே இருக்கிறது.

அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சி அலையை உருவாக்கிய இந்த குண்டு வெடிப்பு குறித்து உள்ளூர் போலீஸ் ஒத்துழைப்புடன் எப்.பி.ஐ. அமைப்பு தீவிர விசாரணை நடத்தி வருகிறது. முதல் கட்ட விசாரணையில், தீவிரவாதிகள் பயன்படுத்தும் குக்கர் வெடிகுண்டு என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். பால்பேரிங், ஆணிகள் ஆகியவை கொண்டு இந்த குக்கர் குண்டை தயாரித்து கறுப்புநிற நைலான் பைகளில் வைத்து எடுத்துச் சென்று மராத்தான் பந்தயம் நிறைவடையும் பகுதியில் வைத்து வெடிக்க செய்துள்ளனர் என்பது தெரியவந்தது.

இந்த நிலையில் சம்பவம் நடந்த பாஸ்டன் தெருவில் உள்ள சி.சி.டி.வி. க்களில் பதிவாகியுள்ள வீடியோக்களை வைத்து இரண்டு நபர்கள் மீது எப்.பி.ஐ. க்கு சந்தேகம் ஏற்பட்டது. ஒரு கடையில் (டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர்) வைத்திருந்த காமிராவில் பதிவான வீடியோ காட்சி எப்.பி.ஐ. போலீசாரிடம் சிக்கியது. அதில் 2 வது குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் ஒரு நபர் செல்போனில் பேசி கொண்டு நிற்கும் காட்சி பதிவாகியுள்ளது. சற்றுநேரத்தில் குண்டு வெடிக்க, மக்கள் சிதறி ஓட, அந்த நபர் மட்டும் மற்றவர்களுக்கு மாறுபட்டு எதிர்திசை நோக்கி ஓடும் காட்சியும் பதிவாகி இருந்தது. இந்த நிலையில் தான் இதில் தொடர்புடைய ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான். இன்னொரு நபரைப் பிடிக்க இப்போது எப்.பி.ஐ. தீவிரமாகக் களமிறங்கியுள்ளது.

இந்த சம்பவத்தாலும், மசாசூசெட்ஸ் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பத்தாலுமம் பாஸ்டன் நகரில் பெரும் பரபரப்பு நிலவியது. தப்பியோடிய தீவிரவாதி யாரை வேண்டுமானாலும் தாக்கலாம் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் யாரும் வீட்டைத் தட்டினால் திறக்க வேண்டாம் என்றும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்