முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலக்கரி ஊழல்: பா.ஜ. கோரிக்கையை நிராகரித்தார் சோனியா

செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2013      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,ஏப்.24 - நிலக்கரி சுரங்க ஊழல் விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக மாட்டார் என்று பாரதிய ஜனதா கோரிக்கையை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஏற்க மறுத்துவிட்டார். பாராளுமன்றம் நேற்று கூடியதும் நிலக்கரி சுரங்க ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்று பாரதிய ஜனதா வலியுறுத்தியது. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியில் முக்கிய அங்கமாக திகழும் ஐக்கிய ஜனதாதளம்,பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தவில்லை. மேலும் சமாஜ்வாடி கட்சியும் பிரதமர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தவில்லை. ஆனால் பாரதிய ஜனதா கட்சியானது தனது கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தியதால் பாராளுமன்ற கூட்டத்தை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் கூட்டம் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கமல்நாத் உள்பட பல தலைவர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த சோனியா காந்தி, நிலக்கரி சுரங்க குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலகமாட்டார் என்று அறிவித்தார். 

இதற்கிடையில் நிலக்கரி சுரங்க ஊழல் குறித்த விசாரணை அறிக்கையை பாராளுமன்ற நிலைக்குழு நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது. அதில் கடந்த 1993 முதல் 2008-ம் ஆண்டுவரை நிலக்கரி சுரங்கங்கள் அதிகாரப்பூர்வமற்ற முறையிலும் வெளிப்படையாகவும் ஏலம் விடப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இதனால் ஆளும் காங்கிரஸ் கூட்டணிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே கடும் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் ஏலம் முறை பின்பற்றப்படவில்லை. இது மத்திய அரசை கட்டுப்படுத்தாவிட்டாலும் நிலக்கரி சுரங்க ஊழலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும். ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலக்கரி சுரங்கங்களில் நிலக்கரி வெட்டி எடுக்கப்படாமல் இருக்கும் சுரங்க உரிமைகளை ரத்து செய்ய வேண்டும்.  ஆனால் நிலக்கரி சுரங்கம் உரிமம் வழங்கப்பட்டதில் எவ்வளவு வருவாய் இழப்பு என்பது குறித்து அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்