முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மு.க.ஸ்டாலின் மீது வழக்கு: மேயர் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப். 27 - சென்னை மாநகராட்சி ஊழல் நடந்துள்ளதாக தவறாக குற்றம் சாட்டியுள்ள மு.க.ஸ்டாலின் அதை ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் மு.க.ஸ்டாலின் மீது மாநகராட்சி சார்பில் வழக்கு தொடரப்படும் என்று சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி அறிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் சைதை துரைசாமி தலைமையில் இன்று நடந்தது. துணை மேயர் பெஞ்சமின், கமிஷனர் விக்ரம் கபூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

தி.மு.க. கவுன்சிலர்களை வெளியேற்றம்:

கூட்டம் தொடங்கியதும் தி.மு.க. கவுன்சிலர் போஸ் எழுந்து நின்று வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கூறினார்.அதற்கு கேள்வி நேரம் முடிந்ததும் அது பற்றி பேசுவோம் என்று மேயர் சைதை துரைசாமி கூறினார். 

இதை ஏற்க மறுத்து தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். சிறிது நேரம் கழித்து அவர்கள் அவைக்கு திரும்பினார்கள். இதைத் தொடர்ந்து மேயர் சைதை துரைசாமி முதல்- அமைச்சரை பாராட்டி சிறப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். அதன் பின்னர் மேயர் சைதை துரைசாமி பேசியதாவது:- 

சென்னை மாநகராட்சியின் செயல்பாட்டை விமர்சித்து தி.மு.க. இதுவரை 2 ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளது. அது உண்மைக்கு புறம்பானது. பொய்யான தகவலை மக்களிடம் பரப்புகிறார்கள். அனுபவ அறிவு, நிர்வாகத் திறமை உள்ளவர்கள் அவ்வாறு பேசமாட்டார்கள். 

சென்னை மேயராக இருந்த மு.க. ஸ்டாலினுக்கு மாகநராட்சியின் செயல்பாடு என்ன, சென்னை பெருநகர் குடிநீர் வாரியத்தின் செயல்பாடு என்ன என்பது கூட தெரியவில்லை. இவை இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் கூட தெரியாமல் அவர் உள்ளாட்சி அமைச்சராகவும் செயல்பட்டுள்ளார். இது அவரது அறியாமையை வெளிப்படுத்தியுள்ளது. 

(இதற்கு தி.மு.க. கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.) 

மாநகராட்சி அதிகாரம் பற்றி முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியத்துக்கு தெரியவில்லை. அடையாறு ஆற்றில் பொது மக்களுக்கு பட்டா கொடுக்க வேண்டும் என்று மாநகராட்சி இணை ஆணையரிடம் புகார் கொடுக்கிறார். இது பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்பது கூட அவருக்கு தெரியவில்லை.இவ்வாறு அவர் பேசினார். 

இதையடுத்து தி.மு.க. உறுப்பினர்கள் இருக்கையை விட்டு எழுந்து மேயரை முற்றுகையிட்டனர். தரையில் உட்கார்ந்து தர்ணா செய்தனர். 

இதையடுத்து மேயர் கூறும்போது, அரசியல் தெளிவு இருந்தால் பதில் தாருங்கள். நான் பேசிய பிறகு உங்களுக்கு பேச அனுமதி தருகிறேன். நீங்கள் அனைவரும் பேசலாம். இப்போது உங்கள் இருக்கைக்கு சென்று அமருங்கள். மக்கள் மன்றத்தில் தவறான குற்றச்சாட்டை கூறி இருக்கிறீர்கள். அதற்கு நீங்கள் பதில் அளிக்க வேண்டும் என்றார். 

ஆனாலும் தொடர்ந்து மேயரை முற்றுகையிட்டு கோஷமிட்டதால் அவர்களை கூண்டோடு வெளியேற்றும்படி மேயர் உத்தரவிட்டர். 

இதைத் தொடர்ந்து மாநகராட்சி காவலர்கள் தி.மு.க. கவுன்சிலர்களை வெளியேற்றினார்கள்.

சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு மேயர் சைதை துரைசாமி வெள்ளை அறிக்கை வெளியிட்டு பதில் அளித்தார். அவர் கூறியதாவது:- 

சென்னை மாநகராட்சியில் 1996 முதல் 2001 வரை 5 வருடம் மேயராக இருந்த மு.க.ஸ்டாலின் காலத்தில் மாநகராட்சி செலவு செய்த மொத்த தொகை ரூ.534 கோடி. 2006 முதல் 2011 வரை முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் காலத்தில் மாநகராட்சி செலவு செய்த மொத்த தொகை ரூ.1684 கோடி. இந்த 10 ஆண்டு காலத்திலும் மொத்தம் செலவு செய்த தொகை ரூ.2199 கோடி. தி.மு.க. பொறுப்பெற்ற இந்த 10 ஆண்டுகளில் சென்னையை சீர்மிகு சென்னையாக உருவாக்கி விட்டதாக கூறுகிறார்கள்.

நாம் ஒன்றுமே செய்யாதது போலவும், செய்யப்படாதது போலவும் சொல்லி இருக்கிறார்கள். அ.தி.மு.க.வின் தற்போதைய 18 மாத ஆட்சி காலத்தில் மாநகராட்சி திட்ட செலவுக்காக ரூ.3189 கோடி செலவு செய்துள்ளோம். தி.மு.க.வை காட்டிலும் 1 1டி2 ஆண்டுகளில் அதிக அளவு நிதி ஒதுக்கியுள்ளோம். அப்படி இருக்கையில் செயல்படாத மாநகராட்சி என்று குறை கூறுவதா? சென்னை மாநரகாட்சி பணிகளுக்காக ரூ.426 கோடியை சிறப்பு நிதியாக முதல்-அமைச்சர் ஒதுக்கியுள்ளார். நடப்பு ஆண்டிற்கு ரூ.734 கோடி தந்திருக்கிறார். இது வரையில் சென்னை மாநகராட்சிக்கு எந்த முதல்-அமைச்சரும் சிறப்பு நிதியாக இவ்வளவு தொகையை ஒதுக்கீடு செய்யவில்லை.

எந்த முதல்- அமைச்சருக்கு மக்கள் மீது அக்கறை இருக்கிறது என்பதையும், யாருடைய ஆட்சியின் கீழ் சென்னை மாநகராட்சி நிர்வாகம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது என் பதையும் யாருடைய ஆட்சியின் கீழ் செயல்படவில்லை என்பதையும் மக்கள் புரிந்து கொள்வார்கள். மாநகராட்சி பற்றி அடிப்படை தகவல் கூட தெரியாமல் மு.க.ஸ்டாலின் போராட்டம் நடத்துகிறார்.

சென்னை மாநகராட்சி ஊழல் நடந்துள்ளதாக தவறாக குற்றம் சாட்டியுள்ள மு.க.ஸ்டாலின் அதை ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் மு.க.ஸ்டாலின் மீது மாநகராட்சி சார்பில் வழக்கு தொடரப்படும். 

சென்னை மாநகராட்சி பற்றி குறை சொல்ல அவருக்கு தகுதி இல்லை. நீங்கள் நடத்திய நாடகத்துக்கு உங்கள் பாணியிலேயே நான் பதில் தருகிறேன். மு.க.ஸ்டாலின், மா. சுப்பிரமணியன் ஆகியோர் மேயர் தொகுதி மேம்பாட்டு நிதியை கூட முழுமையாக பயன்படுத்தவில்லை.

இவ்வாறு மேயர் சைதை துரைசாமி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்