முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மனிதனுக்கு செல்போன்-கம்ப்யூட்டர் அவசியமாகி விட்டன - எஸ்.பி.முத்துராமன்

ஞாயிற்றுக்கிழமை, 1 மே 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, மே.- 1 - மனிதனுக்கு உணவு, உடை, இருப்பிடம் அத்யாவசிய தேவையாக இருப்பது போல் இன்று செல்போன், கம்ப்யூட்டர், கேமரா ஆகியவை அவசியமாகி விட்டது என்று பிரபல திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் வியப்புடன் கூறினார். நெல்சன் மாணிக்கம் சாலையில் அமைந்துள்ள சாஃப்ட்வியூ மீடியா காலேஜ் மாணவர்கள் நடத்திய சித்திரை புகைப்பட கண்காட்சி 2011 சென்னையில் நடந்தது. கண்காட்சியை பிரபல திரைப்பட இயக்குனர் எஸ்.பி.முத்துராமனும், பிரபல திரைப்பட பாடலாசிரியர் மதன் கார்க்கியும் துவங்கி வைத்தார்கள். வழக்கறிஞர் அருள்மொழி, சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டார்கள். விழாவில் பேசிய டைரக்டர் எஸ்.பி.முத்துராமன், அந்த காலத்தில் நாகாராஜ ராவ் என்றொரு புகைப்பட கலைஞர் இருந்தார். எம்.ஜி.ஆர் சிவாஜி இருவருமே அவரிடம் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். பிறகு எம்.ஆர் பிரதர்ஸ் என்று பல இடங்களில் கலர் ஸ்டுடியோ வைத்திருந்த முருகப்பன் பெரிய பெயரோடும் புகழோடும் விளங்கினார்.
இன்றைக்கு கலர் போட்டோ எடுப்பதும் பிரிண்ட் போடுவதும் இவ்வளவு சுலபமாக நடக்கிறது என்றால், ஜப்பான் மிஷின்களை இறக்குமதி செய்த அவரது அட்வான்ஸ் டெக்னாலஜி மனப்பான்மைதான் காரணம். நான் ஸ்டுடியோவில் படம் எடுத்துக் கொண்டிருக்கும் போது பத்திரிகை புகைப்படக் காரரான ஸ்டில்ஸ் ரவி, நடிகர் நடிகைகளை நைசாக செட்டுக்கு வெளியே அழைத்து சென்று விடுவார். மிக மிக வித்யாசமான கோணங்களில் அவர்களை படம் பிடிப்பார். அவரது தனித்தன்மையால் இன்னும் அவரது படங்கள் பேசப்பட்டு கொண்டிருக்கிறது. அது போலதான் சாரதி என்ற புகைப்படக் காரரும் இருந்தார். கேமிராவை வளைத்து திருப்பி அவர் படமெடுக்கும் போது நமக்கெல்லாம் படம் கோணலாக வந்துவிடுமோ என்று சந்தேகமே வந்துவிடும்.
ஆனால் பின்பு படமாக பார்க்கும் போது பிரமிக்க வைப்பார். அப்படிப்பட்ட புகைப்பட நிபுணர்களில் ஒருவராக இருந்த கே.வி.ஆனந்த் இன்று திரைப்பட இயக்குனராகவும் வளர்ச்சியடைந்து வெற்றிப்படங்களை கொடுக்கிறார் என்றால், அவரை போன்றவர்களைதான் nullநீங்கள் முன் மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இன்றைக்கு உணவு உடை இருப்பிடம் எந்தளவுக்கு ஒரு மனிதனுக்கு அவசியமோ, அந்தளவுக்கு செல்போன், கம்ப்யூட்டர், கேமிரா ஆகிய மூன்றும் அவசியமாகிவிட்டது. இவற்றை கொண்டு புதிது புதிதாக மாணவர்கள் சிந்திக்க வேண்டும்.
இவ்வாறு எஸ்.பி.முத்துராமன் வாழ்த்துரை வழங்கினார்.
கவிஞர் மதன் கார்க்கி பேசியதாவது​ எனக்கு சிறு வயதிலிருந்தே கேமிரா மீது ஆர்வம் உண்டு. நானே நிறைய நிழற் படங்களை எடுத்திருக்கிறேன். கோ படத்தில் என்னை பாடல் எழுத அழைத்த இயக்குனர் கே.வி.ஆனந்த், இந்த கதை புகைப்படக் கலைஞரை பற்றியது என்று கூறியவுடனே எனக்கு சந்தோஷமாக இருந்தது. நான் சிறு வயது முதல் நேசித்த ஒரு தொழிலை செய்யும் கதாநாயகனை பற்றி பாடல் எழுத மிகுந்த ஆர்வமானேன். நிழலை திருடும் மழலை நான் என்றொரு வரியை எழுதியிருந்தேன்.
அது மட்டுமல்ல, போகஸ் என்பார்கள் ஆங்கிலத்தில். அது எப்படியிருக்கும் என்பதை புதிய நிலா என்று எழுதினேன். இன்றைக்கு தொழில் நுட்பம் ஏராளமாக வளர்ந்திருக்கிறது. தண்ணீருக்கு அடியில் மீன் எப்படி பார்க்குமோ, அந்தளவுக்கு விரிந்து பரந்த கோணத்தில் அமைந்த லென்ஸ்களும் வந்துவிட்டன. இவற்றையெல்லாம் பயன்படுத்தினால் மட்டும் போதாது. அதில் தங்கள் தனிப்பட்ட நுண்ணறிவை செலுத்தி மாணவர்கள் புதிய சாதனைகள் படைக்க வேண்டும். இங்கு பல்வேறு தலைப்புகளில் புகைப்படங்களை எடுத்திருந்தார்கள் மாணவர்கள். ``மெல்லினம்'', ``வல்லினம்'', ``முக பாவனைகள்'', பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு என்று அந்த தலைப்புகளே ஈர்த்தது. அதிலும் என்னை கவர்ந்தவை, ஒரு குழந்தை குளிப்பது போன்ற படமும், ஒரு முதியவர் தூங்குவது போன்ற படமும்தான் என்றார். அப்படத்தை எடுத்த மாணவர்களுக்கு தனிப்பட்ட முறையில் பாராட்டையும் தெரிவித்தார். நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் சாஃப்ட்வியூ நிறுவனர் எம்.ஆன்ட்டோ பீட்டர் நன்றி தெரிவித்தார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்