முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரச்சாரக் குழு தலைவராக மோடிக்கு முடிசூட்டிய பா.ஜ.க.

ஞாயிற்றுக்கிழமை, 9 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

பனாஜி, ஜூன். 10 - வரவிருக்கும் 2014 ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான கட்சியின் தேர்தல் பிரச்சாரக் குழு தலைவராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு முடிசூட்டி மகிழ்ந்திருக்கிறது பாரதீய ஜனதா கட்சி. அதே வேளையில் பிரதமர் வேட்பாளராக அவரை முன்னிலைப்படுத்த கட்சியின் செயற்குழு மறுத்து விட்டது. 

கோவாவில் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த செயற்குழு கூட்டத்தில் கட்சித் தலைவர் ராஜ்நாத்சிங், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மற்றும் சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று வருகிறார்கள். ஆனால் மூத்த தலைவராக கருதப்படும் எல்.கே. அத்வானி இந்த மிக முக்கியமான செயற்குழு கூட்டத்திற்கு வரவில்லை. உடல் நலத்தை காரணம் காட்டி அவர் இந்த செயற்குழு கூட்டத்தை புறக்கணித்ததாக கூறப்பட்டது. 

இதனிடையே கட்சியின் பிரச்சார குழு தலைவராக அத்வானியை தேர்ந்தெடுப்பதா அல்லது மோடியை தேர்ந்தெடுப்பதா என்கிற விஷயத்தில் பா.ஜ.க குழம்பிப் போயிருந்தது. இந்த குழப்பத்திற்கு நேற்று ஒரு முடிவு ஏற்பட்டது. 2014 பொதுத் தேர்தலுக்கான பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் பிரச்சார குழு தலைவராக குஜராத் முதல்வர் மோடிக்கு ஒருவழியாக முடிசூட்டியிருக்கிறது பாரதீய ஜனதா கட்சி.அதே நேரம் அவரை வரவிருக்கும் தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளராக முன்னிலைப்படுத்த கட்சியின் செயற்குழு மறுத்து விட்டது. 

இந்த கூட்டத்திற்கு பிறகு கட்சியின் தேசிய தலைவர் ராஜ்நாத்சிங், சுஷ்மா ஸ்வராஜூடன் இணைந்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறிய அவர், பா.ஜ.க தேர்தல் பிரச்சார குழு தலைவராக நரேந்திர மோடியை நான் அறிவிக்கிறேன் என்று தெரிவித்தார். லோக்சபா தேர்தலை மனதில் கொண்டு மோடியை பிரச்சார குழு தலைவராக தான் அறிவித்திருப்பதாகவும் ராஜ்நாத்சிங் தெரிவித்தார். ராஜ்நாத்சிங் இவ்வாறு அறிவித்ததும் நரேந்திர மோடியின் ஆதரவாளர்கள் முரசு கொட்டி வெற்றி கோஷங்களை எழுப்பி அந்த அறிவிப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். இன்னும் சில தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். எல்லோருடைய ஆதரவுடனும் எது நடக்க வேண்டுமோ அது நடந்திருக்கிறது என்றும் ராஜ்நாத்சிங் தெரிவித்தார். 

மோடியை பிரச்சார குழு தலைவராக்கி வரவிருக்கும் தேர்தலை சவாலுடன் சந்திக்க தயாராகி விட்டது பாரதீய ஜனதா கட்சி. பின்னர் இக்கட்சியின் மேலிட பிரதிநிதிகளில் ஒருவரான சையது ஷாநவாஸ் உசேன், நரேந்திர மோடியை புகழ்ந்து பேட்டியளித்தார். நரேந்திர மோடி ஒரு மதசார்பற்ற தலைவர் என்று கூறிய அவர், பாரதீய ஜனதாவுடன் கூட்டணி வைக்க பல்வேறு கட்சிகள் விரும்புவதாகவும் தெரிவித்தார். மக்கள் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். அந்த எதிர்பார்ப்புகளை எங்களால் புறக்கணிக்க முடியாது. தொண்டர்களும் எதிர்பார்க்கிறார்கள். அவர்களையும் எங்களால் புறக்கணிக்க முடியாது என்று கட்சியின் செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஷாநவாஸ் உசேன் தெரிவித்தார். செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளையும் அவர் விவரித்தார். 

மோடிக்கு ஐக்கிய ஜனதா தள கட்சி எதிர்ப்பு தெரிவிப்பது பற்றி கேட்ட போது, நாங்கள் யாரிடம் இருந்தும் சான்றிதழை எதிர்பார்க்கவில்லை என்று உசேன் கோபமாக தெரிவித்தார். யார் மதசார்பற்ற தலைவர் அல்லது யார் மதசார்புடைய தலைவர் என்பதை பற்றி எங்களுக்கு சான்றிதழ் தேவையில்லை என்றும் உசேன் மேலும் தெரிவித்தார். பாரதீய ஜனதா கட்சியில் எல்லோருமே மத சார்பற்ற தலைவர்கள்தான். யாருக்கும் இனப் பாகுபாடு இல்லை என்றும் அவர் மேலும் விவரித்தார். நரேந்திர மோடியின் கொள்கைகளும், அத்வானியின் கொள்கைகளும் ஒன்றுதான் என்றும் அவர் விளக்கமளித்தார். அதே போல அருண்ஜெட்லியின் கொள்கையும் சுஷ்மாஸ்வராஜின் கொள்கையும் ஒன்றுதான் என்றும் உசேன் விளக்கமளித்தார். 

வாஜ்பாயின் வழிவந்த எல்லோருமே மதசார்பற்ற தலைவர்கள்தான் என்றும் உசேன் தெள்ளத்தெளிவாக தெரிவித்தார். கட்சியின் பிரச்சார குழு தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதால் வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் காங்கிரசும் தங்களது கட்சி முதல்வர்களுக்கு ஒரு கிடுக்கிப்பிடி போட்டுள்ளது. வரவிருக்கும் தேர்தலில் அதிக எம்.பி. தொகுதிகளை கைப்பற்றும் வகையில் பாடுபட வேண்டும். இல்லாவிட்டால் பதவி காலியாகி விடும் என்று காங்கிரஸ் முதல்வர்களுக்கு கட்சி மேலிடம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதாம். எனவே வரப்போகும் பாராளுமன்ற தேர்தல் ஒரு கடுமையான பலப்பரிட்சையாக இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்