பி.கு. தலைவராக மோடியை நியமித்ததில் மாற்றம் இல்லை

செவ்வாய்க்கிழமை, 11 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூன். 12 - பாரதீய ஜனதாவின் தேர்தல் பிரச்சார குழு தலைவராக நரேந்திர மோடியை நியமித்த கட்சியின் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று அக்கட்சியின் தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் திட்டவட்டமாக தெரிவித்தார். இது குறித்து புதுடெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராஜ்நாத்சிங், 

மாற்றம் குறித்து யாருமே பேசாத போது எதற்காக மாற்ற வேண்டும். ஏன் மாற்ற வேண்டும்? என்று கேள்வி எழுப்பினார். எல்லாம் சரியாகி விடும் என்றும் அவர் மற்றொரு கேள்விக்கு பதிலளித்தார். நரேந்திரமோடியை நியமித்த கட்சியின் முடிவில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் அவர் தெரிவித்தார். 

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளோடு பா.ஜ.க.வுக்கு நீண்ட கால உறவு இருக்கிறது. எனவே நிலைமை சரியாகி விடும் என்று தெரிவித்தார். அத்வானியின் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்றும் அவர் தெரிவித்தார். நாடு தற்போது நெருக்கடியை சந்தித்து வருகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பல வழிகளிலும் தோற்று விட்டது என்றும் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: