முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூசிலாந்தில் பயங்கர நில நடுக்கம்

செவ்வாய்க்கிழமை, 22 பெப்ரவரி 2011      உலகம்
Image Unavailable

 

கிரைஸ்ட்சர்ச், பிப்.23 - நியூசிலாந்து நாட்டில் நேற்று பயங்கர பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகிவிட்டன. இடிபாடுகளில் சிக்கி 200 க்கும் மேற்பட்டோர்  பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. நியூசிலாந்து நாட்டில் உள்ள கிரைஸ்ட்சர்ச் என்ற நகரில் நேற்று காலை திடீரென பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. இது ரிக்டர் அளவையில் 6.3 ஆக பதிவாகி இருந்தது. இதன் தாக்கம் பலமாக இருந்ததால், அந்த நகரின் கட்டிடங்கள், வீடுகள் நூற்றுக்கணக்கில் இடிந்து தரைமட்டமாயின. ரோடுகளில் சில மீட்டர் தூரத்திற்கு விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. இந்த நகரின் முக்கிய பகுதியில் உள்ள ஒரு பிரபலமான வணிகவளாகம் ஒன்றும் இடிந்து தரைமட்டமானது.  இதனால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி 200 க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

நிலநடுக்கம் ஏற்பட்ட உடனேயே கட்டிடங்கள் ஆடத் தொடங்கியதால் மக்கள் அனைவரும் அலறி அடித்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியே ஓடி தெருக்களில் குவிந்தனர். பூகம்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பலியானோரின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன. மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. ஒரு பள்ளத்தில் இரண்டு பேருந்துகள் விழுந்து சிக்கிக்கொண்டன. ரோடுகளில் வரிசல் ஏற்பட்டுள்ளதால் சாலை போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கிரைஸ்ட்சர்ச் சர்வதேச விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டது. இங்கு வந்து இறங்கவேண்டிய விமானங்கள் அனைத்தும் வந்தவழியே திருப்பி அனுப்பப்பட்டன. 

இந்த நிலையில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட நியூசிலாந்து நாட்டிற்கு ஆஸ்திரேலியா தனது மீட்பு படையினரை அனுப்பி வைத்துள்ளது. பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. நியூசிலாந்து நாட்டில் சென்ற ஆண்டு 7.1 ரிக்டர் அளவுக்கு பெரிய பூகம்பம் ஏற்பட்டு பலத்த சேதம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்