முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பி.ஏ.சி. அறிக்கையை சபாநாயகர் ஏற்க ஜோஷி வலியுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 6 மே 2011      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி,மே.6 - ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழு தயாரித்த வரைவு அறிக்கையை மக்களவை தலைவர் மீராகுமார் ஏற்க வேண்டும் என்று அக்குழுவின் தலைவர் முரளி மனோகர் ஜோஷி வலியுறுத்தி உள்ளார். 

2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக பி.ஏ.சி தயாரித்த வரைவு அறிக்கைக்கு குழுவில் இருந்த காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து நடந்த கூட்டத்தில் கடும் அமளி ஏற்பட்டதை தொடர்ந்து அறிக்கை இறுதி செய்யப்படவில்லை. இந்த அறிக்கையை சபாநாயகர் மீராகுமாரிடம் ஜோஷி அளித்து விட்டார். 

இதனிடையே கடந்த 30 ம் தேதியுடன் பி.ஏ.சியின் பதவிக்காலம் முடிவடைந்து புதிய பி.ஏ.சி. நியமிக்கப்பட்டிருக்கிறது. இதற்கும் ஜோஷியே தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். இதையடுத்து நிருபர்களுக்கு பேட்டியளித்த ஜோஷி, அறிக்கையை மீராகுமார் ஏற்பதை தவிர வேறு வழியில்லை. அவர் நிராகரிக்க முடியாது என்று தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், பி.ஏ.சியில் வாக்கெடுப்பு என்பதே கிடையாது. அதற்கு எந்த முன்னுதாரணமும் இல்லை. வரைவு அறிக்கையில் சில பத்திகளை சேர்ப்பது, சில பத்திகளை நீக்குவது போன்றவைதான் பி.ஏ.சி. கூட்டங்களில் நடக்கும் என்றார். இதனிடையே ஜோஷி சமர்ப்பித்த அறிக்கை மற்றும் இதர ஆவணங்களை மக்களவை தலைவர் மீராகுமார் பரிசீலித்து வருவதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்