முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கானா மாநில விவகாரத்தால் காங்.,க்கு தலைவலி

ஞாயிற்றுக்கிழமை, 28 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூலை.29 - ஆந்திர மாநிலத்தைப் பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைத்தால் கோர்க்காலாண்ட், போடோலேண்ட் மாநில பிரச்சனை உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலம் அமைப்பது என்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக்குழுவும், காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டியும் முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட உள்ள  நிலையில், கோர்க்காலாண்ட், போடோலேண்ட் மாநில பிரச்சனை காங்கிரஸ் தலைமைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே 72 மணி நேர பந்த் அனுசரிக்குமாறு கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா என்ற அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. தனி மாநிலம் அமைப்பதற்கான இறுதிப் போர் துவங்கி விட்டது. எங்கள் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால், 2011-ம் ஆண்டு அமைக்கப்பட்ட கோர்க்காலேண்ட் நிர்வாகத்தின் தலைமை நிர்வாகி பொறுப்பை ராஜினாமா செய்வேன் என்றும் அதன் தலைவர் பிமால் குருங் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தெலுங்கானா மாநிலம் அமைத்தே தீருவோம் என்று முடிவு செய்யும் பட்சத்தில் அது ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியில் பிளவை ஏற்படுத்தும். ஆந்திர மாநிலத்தைப் பிரித்து, தனி தெலுங்கானா அமைத்தால் முதல்வர் பதவியை நான் ராஜினாமா செய்வேன் என்று கிரண்குமார் ரெட்டி மிரட்டியுள்ளார்.

மேலும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை சந்தித்த அவர்  ஆந்திர மாநிலத்தை பிரிக்கும் மோசமான முடிவுக்கு நான் காரணமாக இருக்க மாட்டேன் என்றும் கிரண்குமார் ரெட்டி தெரிவித்துள்ளார்.      

ஆந்கிர மாநிலத்தை பிரிக்கக் கூடாது என்று சோனியா காந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில் சீமந்தரா பகுதியைச் சேர்ந்த அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். தெலுங்கானா மாநிலம் அமைப்பது ஆந்திர மாநிலத்துக்கோ, நாட்டுக்கோ நன்மை பயக்காது என்றும் அவர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தெரிவித்துள்ளனர். 

இந்த பிரச்சனை பற்றி நிருபர்களிடம் பப்பி ராஜூ பேசுகையில், தெலுங்கானா அமைந்தால் அது மகாராஷ்டிரம், மேற்கு வங்காளம், உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில்  எதிரொலிக்கும் என்றார்.இதுதொடர்பாக அவர்கள் கே.எஸ். ராவ் வீட்டில் ஒன்று கூடி விவாதித்தனர். சைலஜாநாத் தலைமையிலான குழு இதுபற்றி தெரிவிக்கையில், தெலுங்கானா மாநிலம் அமைந்தால் 15 அமைச்சர்களும் ராஜினாமா செய்வதைத் தவிர வேறு வழி இல்லை  என்று தெரிவித்தனர். 

இந்நிலையில் நீங்கள் மூத்த சகோதரர்போல் செயல்பட வேண்டும் என்றும் தெலுங்கானா மாநிலம் அமைய உதவி புரிய வேண்டும் என்றும் அதற்கு நீங்கள் தடையாக இருக்கக் கூடாது என்றும் தெலுங்கானா ஆதரவாளரான பொன்னம் பிரபாகர் கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கிடையே இன்னும் சில நாள்களில் தெலுங்கானா மாநிலம் அமைப்பது பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்றும்,  காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் இதுபற்றி முறையான முடிவு எடுக்கப்பட்டு பின்னர் பார்லிமென்டுக்கு அனுப்பப்படும் என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

தெலுங்கானா தொடர்பாக  வீண் பிரச்சனையை கிளப்பி மத்திய அரசுக்கு தலைவலியை ஏற்படுத்த வேண்டாம் என்று தெலுங்கானா ஆதரவாளர்களை அனுமந்தராவ் கேட்டுக்கொண்டுள்ளார். 

தெலுங்கானா மாநிலம் அமைத்தே தீர வேண்டும் என்று சந்திரசேகர் ராவ் தலைமையிலான ராஷ்ட்ரிய சமிதியும், தெலுங்கானா  அமைக்கவே கூடாது என்று ஆந்கிர முதல்வர் கிரண்குமார் ரெட்டி மற்றும் மத்திய அமைச்சர்கள் பல்லம் ராஜூ, கே.எஸ்.ராவ், சிரஞ்சீவி, புரந்தேஸ்வரி, எம்.பி.க்கள் பாபிராஜூ, அன்ந்தராமி ரெட்டி ஆகியோர் வலியுறுத்தி வருகின்றனர். தனி தெலுங்கானா உருவாக்கப்பட்டால் மகாராஷ்டிரம், உத்ரபிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தனி மாநில கோரிக்கை வலுவடையும் என்று இவர்கள்  மன்மோகன்சிங்கிடம் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்