மத்திய பிரதேசத்தில் மழை வெள்ளத்துக்கு 106 பேர் பலி

சனிக்கிழமை, 24 ஆகஸ்ட் 2013      இந்தியா
Image Unavailable

 

போபால், ஆக. 25 - மத்தியபிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதில் 12 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஹோசங்காபாத் மற்றும் விதிஷா மாவட்டம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலத்தில் ஓடும் நர்மதா மற்றும் பெட்வா நதிகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. கனமழை மற்றும் பெரு வெள்ளம் காரணமாக 24 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் தண்ணீரில் மூழ்கின. 

மத்திய பிரதேசம் வழியாக தென்னிந்தியாவுக்கு வரும் பல ரயில்கள் ஆங்காங்கு நிறுத்தப்பட்டுள்ளன. பெட்டுல் மாவட்டத்தில் பர்பத்பூர் மற்றும் மகர்தோ ரயில் நிலையங்களுக்கு இடையில் 30 மீட்டர் நீளத்துக்கு ரயில் தண்டவாளத்தை வெள்ள நீர் அடித்து சென்று விட்டது. ஹோசங்காபாத் மாநிலத்தின் மற்ற பகுதிகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான கிராமங்களிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். 

கடந்த 36 மணி நேரத்தில் கனமழை காரணமாக 21 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து கடந்த ஒரு வாரத்தில் இதுவரை 106 பேர் கனமழை காரணமாக உயிரிழந்துள்ளனர். வெள்ள சேதங்கள் மற்றும் நிவாரண பணிகள் குறித்து முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் தலைமையில் உயர்மட்டக்குழு நேற்று ஆலோசனை நடத்தியது.

இதை ஷேர் செய்திடுங்கள்: