முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நத்தம் மாரியம்மன் கோவில் பூக்குழி விழா

புதன்கிழமை, 23 பெப்ரவரி 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

நத்தம், பிப்.23 - நத்தம் அருள்மிகு மாரியம்மன் கோவில் மாசிப்பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கழுமரம் ஏறும் நிகழ்ச்சியும், பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் வெகு விமரிசையாக நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருள்மிகு மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். இக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இவ்வருடத்திற்கான திருவிழா கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனையடுத்து அடுத்த நாள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கரந்தமலை சென்று அங்கு நீராடி விட்டு கன்னிமார் தீர்த்தம் சுமந்து வந்து அம்மனுக்கு தீர்த்தாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் விரதம் மேற்கொண்ட பக்தர்கள் தங்கள் கைகளில் காப்புக்கட்டி 15 நாட்கள் விரதம் மேற்கொண்டனர். திருவிழாவை முன்னிட்டு வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் அம்மன் சிம்மம், குதிரை வாகனத்தில் மின்தேரில் வீதியுலா வரும் வைபவமும் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கழுமரம் ஏறும் நிகழ்ச்சியும், பூக்குழி வைபவமும் நேற்று சிறப்பாக நடைபெற்றது.

இதற்காக நேற்றுக்காலை சுமார் 9 மணியளவில் கோவில் முன்பு 70 அடி உயரமுள்ள கழுமரத்தை காந்தி நகர் இளைஞர்கள் ஊன்றினர். மரத்தின் மீது எண்ணெய் போன்ற வழுவழுப்பான பொருட்கள் தடவப்பட்டு அதன் உச்சியில் வேப்பிலை சொருகப்பட்டது. இதனையடுத்து காமராஜ் நகரைச் சேரந்த இளைஞர்கள் கழுமரம் ஏற போட்டி போட்டு முயன்றனர். இறுதியாக கழுமரம் ஏறி உச்சியில் இருந்த வேப்பிலை பறிக்கப்பட்ட பின் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி ஆரம்பமானது.

பூக்குழிக்காக 16 அடி நீளத்தில், 10 அடி அகலத்தில், 5 அடி ஆழத்தில் வேம்பு, கருவேலம் போன்ற மூலிகை குணம் கொண்ட 10,000 டன் எடை கொண்ட குண்டம் வளர்க்கப்பட்டு தீ மூட்டப்பட்டது. கோவில் பரம்பரை பூசாரிகள் பூக்குழி இறங்கியபின் பக்தர்கள் ஒருவர்பின் ஒருவராக பூக்குழி இறங்கத் தொடங்கினர். கைகளில் வேப்பிலையை வைத்தபடி மஞ்சள் நிற உடையுடன் நெற்றியில் வீபூதி பூசியபடி தீச்சட்டி சுமந்தபடியும், தங்கள் கைகளில் குழந்தைகளை சுமந்தபடியும், அலகு குத்தியபடியும் பக்தர்கள் பூக்குழி இறங்கிய நிகழ்ச்சி பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது. சுமார் 15,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.

முன்னதாக காலையில் பக்தர்கள் தீச்சட்டி ஊர்வலம் நடைபெற்றது. அம்மன் குளத்தில் துவங்கிய தீச்சட்டி ஊர்வலம் காளியம்மன் கோவில், மாரியம்மன் கோவிலை வந்தடைந்து மீண்டும் அம்மன் குளத்திலேயே நிறைவடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழாவைக் காண மதுரை, திண்டுக்கல், சிவகெங்கை, காரைக்குடி, தேனி, சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்