முக்கிய செய்திகள்

போர் அத்துமீறல் குற்றச்சாட்டு - இந்தியா உதவ ராஜபக்சே கெஞ்சல்

புதன்கிழமை, 11 மே 2011      இந்தியா
mahinda-rajapaksa 0

 

கொழும்பு, மே 12 - ஐ.நா.வின் போர் அத்துமீறல் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபட இந்தியாதான் உதவ வேண்டும் என்று கெஞ்சியுள்ளார் இலங்கை அதிபர் ராஜபக்சே. 

இலங்கை ராணுவம் விடுதலைப் புலிகளுடன் நடத்திய இறுதிக்கட்ட போரின்போது அத்துமீறல்கள் நடந்துள்ளதாக இலங்கை அரசு மீது ஐக்கிய நாடுகள் அமைப்பின் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில் இலங்கை அதிபர் ராஜபக்சே மீது கடுமையான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. இந்த குற்றச்சாட்டுகளின்படி அவர் மீது விசாரணை நடத்தப்பட்டால் அவருக்கு மரண தண்டனைகூட விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. 

இதுகுறித்து கொழும்பில் நிருபர்களிடம் பேசிய ராஜபக்சே, இந்த விசாரணையில் இருந்து தப்பிக்க இந்தியா உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இந்தியாவுடன் இலங்கை எப்போதும் நல்லுறவுடன் இருப்பதாக அவர் தெரிவித்தார். போர்க் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கைக்கு உரிய பதில் விரைவில்  அனுப்பப்படும் என்றார். 

இன்னும் சில நாட்களில் இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமாராவ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், பாதுகாப்பு செயலாளர் பிரதீப்குமார் அடங்கிய குழு இலங்கை வரவுள்ளதாக இலங்கை அமைச்சர் ஜி.எல்.பெரீஸ் தெரிவித்தார். 

இலங்கையில் சிங்கள, ஈழத் தமிழ் மக்களிடையே நல்லிணக்கத்தை உருவாக்க ஏற்படுத்தப்பட்ட கமிட்டியின் காலம் 6 மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அதிபர் ராஜபக்சே தெரிவித்தார். கொழும்பில் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த ராஜபக்சே, இன நல்லிணக்க சமரசக் குழுவின் காலம் வரும் 15 ம் தேதியுடன் நிறைவடைய இருக்கிறது. இந்நிலையில் இந்த குழுவின் காலத்தை மேலும் 6 மாதத்திற்கு நீட்டிக்க வேண்டும் என்று அக்குழு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ராஜபக்சே தெரிவித்தார். 

இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட போரில் இலங்கை அரசு மீது ஐ.நா. மிகக் கடுமையான குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளது. இதையடுத்து அந்நாட்டுக்கு சர்வதேச அளவில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகத்தான் இன நல்லிணக்க குழுவின் காலக்கெடுவை இலங்கை அரசு நீட்டித்துள்ளது என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: