முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலக்கரி முறைகேட்டில் பிரதமரையும் சேர்க்க போர்க்கொடி

புதன்கிழமை, 16 அக்டோபர் 2013      வர்த்தகம்
Image Unavailable

 

புது டெல்லி, அக். 17 - நிலக்கரி சுரங்க முறைகேடு விவகாரத்தில் பிரதமர் மன்மோகன்சிங்கையும் 3 வது சதியாளராக சேர்க்க வேண்டும் என்று நிலக்கரி துறையின் முன்னாள் செயலாளர் பி.சி. பரேக் போர்க்கொடி உயர்த்தியுள்ளார். மேலும் இதில் இருந்து பிரதமர் தப்ப முடியாது என்று எதிர்க்கட்சிகளும் தெரிவித்திருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

கடந்த 2005 ம் ஆண்டில் நிலக்கரி சுரங்கங்களை முறைகேடான வகையில் ஒதுக்கீடு பெற்றதாக ஆதித்ய பிர்லா குழும தலைவர் குமார் மங்கலம் பிர்லா மீது சி.பி.ஐ. நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்தது தெரிந்ததே. மேலும் அவரது குழும நிறுவனமான ஹிண்டால்கோ மற்றும் நிலக்கரி துறை முன்னாள் செயலாளர் பி.சி. பரேக், பெயர் குறிப்பிடாத சில அரசு துறைகள் மற்றும் தனியார் நிறுவன பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் மீதும் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக விசாரித்து வரும் மத்திய புலனாய்வு துறை(சி.பி.ஐ.) பதிவு செய்த 14 வது முதல் தகவல் அறிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது. 

1993 _ 2011 ம் ஆண்டு வரை நாடு முழுவதும் பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கப்பட்டதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஏராளமான பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. அதை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டின் மேற்பார்வையில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு விவகாரத்தை சி.பி.ஐ. கடந்த 2 ஆண்டுகளாக விசாரித்து வருகிறது. 1993 _ 2004, 2006_2009 ஆகிய காலக்கட்டங்களில் நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் நிகழ்ந்த முறைகேடு தொடர்பாக இதுவரை 13 முதல் தகவல் அறிக்கைகளை சி.பி.ஐ. பதிவு செய்திருந்தது. 

இந்த நிலையில் நேற்று முன்தினம் தொழிலதிபர் பிர்லா, நிலக்கரி துறை முன்னாள் செயலாளர் பி.சி. பரேக் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே நிலக்கரி துறையின் முன்னாள் செயலாளர் பி.சி. பரேக் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பிரதமர் மன்மோகன்சிங்கையும் ஒரு சதியாளராக இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தினார். தொடர்ந்து கூறிய அவர், நிலக்கரி துறை அமைச்சகத்தின் தலைவர் என்ற முறையில் பிரதமர்தான் இந்த விஷயத்தில் இறுதி முடிவு எடுத்தார். ஆகவே அவரையும் ஒரு சதியாளராக, குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்று ஆவேசமாக கூறினார். 

நிலக்கரி சுரங்கம் ஒதுக்கப்பட்டதில் சதி என்ற ஒன்று இருந்தால் அதில் பல பேர் இருக்கிறார்கள். முதலாவது சதியாளர் கே. எம். பிர்லா. மற்றொரு சதியாளர் நான். மூன்றாவது சதியாளர் என்றால் அது நிலக்கரி துறை அமைச்சராக இருந்த இப்போதைய பிரதமர்தான் என்று பரேக் குறிப்பிட்டார். மேலும் அவர் கூறுகையில், 

சதி என்று வந்தால் எல்லோருமே குற்றவாளிகள்தான் என்றும் ஒரு போடுபோட்டார். அப்படியானால் பிரதமரை முதல் சதியாளராக சேர்க்க வேண்டும் என்கிறீர்களா? என்று நிருபர்கள் கேட்டபோது, ஆமாம், கட்டாயமாக என்று கூறிய அவர், இதில் முடிவெடுத்தது அவரேதான். பொறுப்பு அவருக்குத்தான் உள்ளது. அமைச்சராக இருந்த அவர்தான் இந்த முடிவு எடுத்தார் என்று பதிலளித்தார் பரேக். 3 பேர் இருக்கும் போது ஏன் என்னையும், பிர்லாவையும் மட்டும் சி.பி.ஐ. தேர்வு செய்தது. பிரதமரை ஏன் விட்டு விட்டது. இந்த விஷயத்தில் எல்லோருமே ஒரு அங்கம் என்றும் பி.சி. பரேக் குறிப்பிட்டார். நிலக்கரி அமைச்சத்தின் கீழ் வரும் ஆய்வு குழு முதலில் இந்த ஒதுக்கீட்டை நெய்வேலிக்குத்தான் ஒதுக்க வேண்டும் என்று கூறியது. காரணம். அது பொதுத் துறை நிறுவனம் மட்டுமல்ல, தகுதிவாய்ந்த நிறுவனமும் கூட. ஆனால் அதற்கு ஒதுக்காமல் ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு ஒதுக்க சொன்னார் பிர்லா.  முதலில் விண்ணப்பித்தது அதுதான் என்று காரணமும் கூறினார் பிர்லா என்று பழைய கதையை நினைவுகூர்ந்தார் பி.சி. பரேக். பி.சி. பரேக்கின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதிர்க்கட்சிகளும் இந்த ஊழல் விவகாரத்தில் இருந்து பிரதமர் தப்ப முடியாது என்று கூறியுள்ளன.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony