முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்லையில் 10 ஆயிரம் விவசாயிகள் முற்றுகை

வியாழக்கிழமை, 24 பெப்ரவரி 2011      தமிழகம்
Image Unavailable

நெல்லை பிப்-24 - நெல்லை மாவட்டம் கன்னடியன் அணைக்கட்டில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையை அகற்றக்கோரி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் நெல்லையை முற்றுகையிட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் மீது கல்வீச்சு நடத்தியதால் லேசான தடியடியும் நடத்தப்பட்டது. நெல்லை மாவட்டத்திலுள்ள முக்கிய அணைக்கட்டுகளில் ஒன்று கன்னடியன் அணைக்கட்டு. இது தாமிரபரணியின் மூன்றாவது அணையாகும். இந்த அணைக்கட்டின் கீழ் ஏழு கால்வாய்கள் உள்ளன. இந்த கால்வாய்களின் பாசனத்தின் மூலம் ஏராளமான விவசாய நிலங்கள் பயன்பெற்று வருகின்றன. இந்நிலையில் தாமிரபரணியில் மழைக்காலங்களில் வீணாக கடலில் கலக்கும் உபரி நீரை நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள வறட்சியான பகுதிகளுக்கு கொண்டு செல்லும் நோக்கத்தில் வெள்ளநீர் கால்வாய் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக கன்னடியன் அணையில் 515 மீட்டர் நீளத்திலும், ஒரு மீட்டர் உயரத்திலும் தடுப்பு சுவர் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த தடுப்பு சுவரின் மூலம் ஏற்கெனவே நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாசன வசதி பெற்று வந்த 70 ஆயிரம் ஏக்கர் விவசாய நலங்கள் பாதிக்கப்படும். எனவே இப்பகுதியிலுள்ள விவசாயிகளின் நிலை கேள்வி குறியாகிவிடும். எனவே கட்டப்பட்டுள்ள அந்த தடுப்பு சுவரை அகற்ற வேண்டுமென நெல்லை தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள்  போராடி வருகினறனர். நெல்லை, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளின் எதிர்ப்பு வலுத்துவருவதை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அரசு அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். மதுரை மண்டல தலைமை பொறியாளர் சந்திரசேகரன் தலைமையில் நடந்த பேச்சு வார்த்தையில் கட்டப்பட்டுள்ள தடுப்பு சுவர் 70 மீட்டர் நீளத்திற்கு அப்புறப்படுத்தப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. ஆனால் உறுதியளிக்கப்பட்டது போல தடுப்பு சுவர் அகற்றப்படவில்லை. இதனால் கொதித்து போன விவசாயிகள் கடந்த 1ம் தேதி தாமிரபரணி பாசன திட்டக்குழு தலைவர் உதயசூரியன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். ஆனால் அதன் பிறகும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததால் நெல்லையில் பாளையங்கோட்டை-திருச்செந்தூர் சாலையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு மாபெரும் முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக விவசாய சங்கங்கள் ஒட்டுமொத்தமாக அறிவித்திருந்தன.
விவசாய சங்கங்கள் அறிவித்தபடியே நேற்று காலை 9 மணி முதல் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்து வந்தவவசாயிகள் போராட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டிருந்த பாளையங்கோட்டை சீனிவாசக நகர் பகுதியில் குவியத்துவங்கினர். நேரம் ஆக ஆக சுமார் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் அங்கு குவியத்துவங்கினர். விவசாயிகள் வந்த வாகனங்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து பெரும் பாதிப்பு அடைந்தது. மேலும் ஆங்காங்கே கற்களை வைத்து சாலைகளில் தடைகளையும் ஏற்படுத்தினர். இவ்வளவு விவசாயிகள் அங்கு அதிரடியாக குவிவார்கள் என்று எதிர்பார்காத காவல்துறையினர் செய்வதறியாமல் திகைத்தனர். நிலமை கட்டுக்குள் அடங்காமல் போவதை மிகவும் தாமதமாக அறிந்த காவல்துறை அதிகாரிகள் அங்கு கூடுதல் போலிஸ் படையை அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு நெல்லை சரக டி.ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன், நெல்லை மாவட்ட எஸ்.பி.விஜயேந்திர பிதரி, மாநகர போலீஸ் கமிஷனர் வரதராஜு, ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விவசாயிகளை சமரசம் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டனர். ஆனால் விவசாயிகளை அவர்களால் கட்டுப்படுத்த இயலவில்லை. இதற்கிடையே விவசாயிகள் ஆங்காங்கே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். வாகனங்கள், அரசுபேருந்துகள் ஆகியவற்றின் மீது கல்வீசித்தாக்குதல்கள் நடத்தினர். இதில் சில பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. நிலமை கட்டுக்கடங்காமல் போவதை தொடர்ந்து போலீஸ் படை விவசாயிகளை கட்டுப்படுத்த முயன்றது. இதனால் ஆவேசமடைந்த விவசாயிகள் காவல்துறையினர் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் காவல்துறையினர் விவசாயிகள் மீது லேசான தடியடி நடத்தினர். ஆனாலும் விவசாயிகள் யாரும் கலைந்து செல்லவில்லை. கலெக்டர் வந்து பேச்சுவார்த்தை நடத்தும் வரை தாங்கள் கலைந்து போவதில்லை என்றும் தெரிவித்தனர். ஆனால் கலெக்டர் அங்கு செல்ல மறுப்பு தெரிவித்ததால் விவசாயிகள் பெரும் பகுதியினர் குழுவாக பிரிந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாகவும், அணைக்கட்டின் தடுப்பு சுவரை தகர்க்க போவதாகவும் தகவல் பரவியதால் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் அணைக்கட்டு பகுதியில் துப்பாக்கிஏந்திய போலீஸ் படை நிறுத்தப்பட்டது. இதனால் காலையிலிருந்தே மாவட்டம் முழுவதும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.  இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மதுரை மண்டல தலைமை பொறியாளர் சந்திரசேகரன், தாமிரபரணி வடிநீர் வட்ட கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கல் ராஜ், துணை கண்காணிப்பு பொறியாளர் நடராஜன் மற்றும் அரசு அதிகாரிகள் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவின் படி 70மீட்டர் நீளத்திற்கு தடுப்புசுவர் இருமாதகால அவகாசத்திற்குள் அப்புறபடுத்தப்படும் என்று எழுத்துப்பூர்வாமாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து காலை 9மணிக்கு துவங்கிய போராட்டம்  ஒரு வழியாக 3மணிக்கு நிறைவு பெற்றது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்