முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக செஸ் சாம்பியன் கார்ல்சனுக்கு திங்கள் பரிசளிப்பு

சனிக்கிழமை, 23 நவம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை.நவ.24 - சென்னையில் நடந்த உலக செஸ் சாம்பியன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற நார்வேயின் கார்ல்சனுக்கு வரும் திங்கட்கிழமை அன்று பரிசளிப்பு விழா நடைபெறுகிறது.

தமிழக அரசின் ஆதரவுடன், நடப்பு சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் (இந்தியா), உலகின் நம்பர் ஒன் வீரர் மாக்னஸ் கார்ல்சன் (நார்வே) இடையிலான உலக சதுரங்க (செஸ்) சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் உள்ள ஹயாத் நட்சத்திர ஓட்டலில் நடந்தது. 

நேற்று முன்தினம்வரை நடைபெற்ற 9 சுற்றுகளின் முடிவில் கார்ல்சன் 6_3 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தார். எனவே, எஞ்சியுள்ள 3 சுற்றுகளில் ஒரு சுற்றில் டிரா செய்தாலே சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் வாய்ப்பு அவருக்கு இருந்தது. அதேசமயம் விஸ்வநாதன் ஆனந்த், தொடர்ந்து 3 சுற்றுகளிலும் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். அப்படியே வென்றாலும் டைபிரேக்கர் பந்தயத்தில் வென்றால்தான் பட்டத்தை வெல்ல முடியும் என்ற நிலை இருந்தது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று முன்தினம் 10_வது சுற்று ஆட்டம் நடைபெற்றது. கடும் நெருக்கடியுடன் ஆடிய ஆனந்த், கார்ல்சனின் நகர்த்தலுக்கு சரியான பதிலடி கொடுத்து முன்னேறினார். ஆனால், அவரால் வெற்றியை நெருங்க முடியவில்லை. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு போட்டியை டிரா செய்ய இருவரும் ஒப்புக்கொண்டனர். இதனால் இருவருக்கும் தலா அரை புள்ளி வழங்கப்பட்டது. 

இதன்மூலம் 6.5 புள்ளிகள் பெற்ற கார்ல்சன் முதல் முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். 

உலக போட்டியில் தோல்வியடைந்தது ஏமாற்றம்: 

தோல்வி குறித்து விஸ்வநாதன் ஆனந்த் கூறியதாவது:_

உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தோல்வி அடைந்தது ஏமாற்றம் அளிக்கிறது. நகர்த்தல்களில் செய்த தவறுகள் காரணமாக வெற்றி வாய்ப்பு பறிபோனது. குறிப்பாக 5_வது சுற்று ஆட்டம் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்த ஆட்டம் வெற்றியை முடிவு செய்வதாக இருந்தது. வெற்றி பெற்ற கார்ல்சனுக்கு எனது வாழ்த்துக்கள். இந்த போட்டியைத் தொடர்ந்து சில காலம் ஓய்வெடுக்க திட்டமிட்டுள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.

சாம்பியன் பட்டம் வென்றது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக கூறிய கார்ல்சன், நீண்ட கால உலக சாம்பியன் கனவு தற்போது நிறைவேறியிருக்கிறது என்றும் கூறினார். கடுமையான போராட்டத்திற்கு பலன் கிடைத்திருப்பதாகவும் கார்ல்சன் குறிப்பிட்டார்.

திங்கள் கிழமை பரிசளிப்பு விழா :

உலக செஸ் சாம்பியன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற நார்வேயின் கார்ல்சனுக்கு வரும் திங்கட்கிழமை அன்று பரிசளிப்பு விழா நடைபெறுகிறது.

சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் திங்கள் கிழமை பகல் 12.15 மணிக்கு நடைபெறும் விழாவில், கார்ல்சனுக்கு செஸ் சாம்பியன் பரிசும், ரூ.8 கோடியே 40 லட்சமும் பரிசுத் தொகை வழங்கப்படும்.

உலக செஸ் போட்டியில் பங்கேற்று இரண்டாம் இடத்தைப் பிடித்த இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்துக்கு ரூ.5 கோடியே 60 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்