முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தோட்டக்கலை துறைக்கு ரூ.5 கோடி நிதி - அமைச்சர்

சனிக்கிழமை, 21 மே 2011      அரசியல்
Image Unavailable

ஊட்டி, மே.21 - தோட்டக்கலைத்துறையை மேம்படுத்த ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்படும் என தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். மலைகளின் அரசியாக விளங்கும் ஊட்டியில் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் வகையில் அமைந்துள்ள உலகப்புகழ் பெற்ற அரசு தாவரவியல் பூங்காவில் 3 நாட்கள் நடைபெறும் 115-வது மலர்காட்சி நேற்று துவங்கியது.

இக்கண்காட்சியை தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று காலை 8.45 மணிக்கு ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். இதனையடுத்து மலர்காட்சியின் நுழைவாயிலிலையடுத்து மலர் மாடங்களில் கண்காட்சிக்காக வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த மலர்களையும், தொடர்ந்து 15 ஆயிரம் மலர்தொட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அலங்கரிக்கப்பட்ட மலர்களை பார்வையிட்டார்.

அதனைத்தொடர்ந்து கார்னேசன், ரோஜா, லில்லியம், அந்தோமேரியா உள்ளிட்ட பல்வேறு வகையான 10 ஆயிரம் மலர்களைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்த கிரிக்கெட் உலக கோப்பை, 5 ஆயிரம் மலர்களைக்கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்த கங்காரு, 10 ஆயிரம் மலர்களைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்த காலரி ஆகியவற்றை பார்த்து ரசித்தார்.

தொடர்ந்து ராஜ்பவன், வெலிங்டன் ராணுவ கல்லூரி, தோட்டக்கலைத்துறை, ஸ்டேட் வங்கி, ஐஏபி உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். அதன் பின்னர் மலர்காட்சி விழா துவங்கியது. இவ்விழாவிற்கு தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் புத்தி சந்திரன் தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண் வேளாண்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் குன்னூர் அருகேயுள்ள காட்டேரியில் புதிதாக மைக்கப்பட்டுள்ள பூங்கா மற்றும் ரோஜா பூங்காவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாரம்பரிய ரோஜாக்களின் தோட்டம் ஆகியவற்றை திறந்து வைத்து பேசியதாவது:

தமிழக முதல்வராக அம்மா பொறுப்பேற்றவுடன் மாநிலத்திலேயே முதல் நிகழ்ச்சியாக இந்த மலர்காட்சி நடக்கிறது. மலைகளின் அரசியாம் நீலகிரி மாவட்டத்தில் முதல் நிகழ்ச்சியில் நடப்பதினால் நாட்டின் எதிர்காலம் பிரசாகமாக உருவாகபோகிறது. தோட்டக்கலைத்துறையை மேம்படுத்த ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்படும். இந்த நிதியுதவி நீலகிரி மாவட்டத்தில்  இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்து வரும் உங்கள் வாழ்க்கை மேம்படுத்த நேரடியாக கிடைக்கும். சுற்றுலா நகரமான ஊட்டியில் நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் முதல்வருடன் கலந்து பேசி விரைவில் பார்க்கிங் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும். கடந்தாண்டு மலர்காட்சியை 1 லட்சத்து 397 பார்வையாளர்களும், கடந்த ஆண்டில் மொத்தமாக 20 லட்சத்து 76 ஆயிரத்து 610 சுற்றுலாப் பயணிகளும் கண்டு களித்துள்ளனர்.  ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு குழந்தைகளை கடத்திய காலம் இருந்தது. தேர்தல் முடிவுகள் வெளிவர ஆரம்பித்தவுடன் அம்மா ஆட்சிக்கு வருகிறார் என்பதை அறிந்த ரவுடிகள் தமிழகத்தை விட்டு ஆந்திராவிற்கு ஓடிவிட்டனர். சட்டமன்ற தேர்தலின் போது கொடுத்துள்ள வாக்குறுதிகள் அனைத்தும் ஓராண்டுக்குள் நடத்தப்பட்டு தமிழகத்தை முதன்மை மாநிலமாக விளங்கப்போகிறது. இவ்வாறு அவர் பேசினார். 

விழாவில் தோட்டக்கலைத்துறை ஆணையர் டாக்டர் சந்திரமோகன் வரவேற்று பேசினார். மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் முன்னிலை வகித்து பேசினார். காவல்துறை கண்காணிப்பாளர் காளிராஜ் மகேஷ்குமார், நகர்மன்ற தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் குப்புசாமி, மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஓ.கே.சின்னராஜ், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ரமணீதரன், அ.தி.மு.க.,மாவட்ட செயலாளர் எம்.செல்வராஜ், முன்னாள் அமைச்சர் அ.மில்லர், தோட்டக்கலை துணை இயக்குநர் தேவராஜன், உதவி இயக்குநர்கள் பிரகாசம், ஜெகதீஸ்குமார், ராம்சுந்தர், மணி, ராஜேந்திரன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் அ.தி.மு.க.,நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தோட்டக்கலை இணை இயக்குநர் ஆல்தொரை நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்