முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆதர்ஷ் குடியிருப்பு முறைகேட்டுக்கு தேஷ்முக்தான் பொறுப்பு

ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011      ஊழல்
Image Unavailable

 

மும்பை,மே.22 - ஆதர்ஷ் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டப்பட்டதற்கு மகராஷ்டிர முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்தான் முழு காரணம் என்று பதவி நீக்கம் செய்யப்பட்ட மாநில தகவல் தொடர்பு ஆணையரும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வருமான ராமானந்த் திவாரி குற்றம் சாட்டியுள்ளார். இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது நீதிபதிகள் முன்னிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். 

ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு கட்டியதில் நிகழந்த முறைகேடு குறித்து விசாரிக்க கடந்த ஜனவரி மாதம் மகராஷ்டிர அரசு இரண்டு பேரடங்கிய விசாரணைக் குழுவை நியமித்தது. இந்த குழு ஆதர்ஷ் வீட்டு வசதி சங்க முறைகேடுகள் குறித்து விசாரித்து வருகிறது. வழக்கமாக குடியிருப்பு கட்டுவதற்கு பின்பற்றப்படும் அனைத்து நடைமுறைகளையும் இந்த குழு பின்பற்றியது. வழக்கமாக அனுமதி பெறுவதற்கு அனுப்ப வேண்டிய அனைத்து துறைகளுக்கும் கட்டுமானம் தொடர்பான விவரங்களை அனுப்பியது. 

அப்போது முதல்வராக இருந்த விலாஸ்ராவ் தேஷ்முக், ஊரக மேம்பாட்டு துறை தலைராகவும் இருந்தார். அவரிடம் ஆதர்ஷ் வீட்டு வசதி சங்கத்தின் கோரிக்கை வைக்கப்பட்டது. அதாவது சிறப்பு அனுமதிக்காக வைக்கப்பட்டிருந்த அந்த இடத்தை வீடு கட்ட அனுமதிக்குமாறு கோரியிருந்தது. இதற்கு அவர் அனுமதி அளித்தார். இதையடுத்தே மார்ச் 3, 2006 ல் சிறப்பு தேவைக்கான அந்த இடத்தில் வீடு கட்ட அனுமதி அளிப்பது என்பதற்கான அறிவிக்கையை அரசு வெளியிட்டது.

நகர்ப்புற மேம்பாட்டு துறை முதன்மை செயலராக இருந்த திவாரி மேலும் கூறுகையில், 2004 செப்டம்பரில் மாநில வருவாய் மற்றும் வனத்துறைக்கு அப்போது அசோக் சவான் பொறுப்பு வகித்தார். ஆதர்ஷ் குடியிருப்பு கோரியிருந்த தரை பரப்பு குறியீடு அளவை வைத்து அதை குடியிருப்பாக மாற்ற அனுமதிக்கலாம் என குறிப்பிட்டதாகவும் தெரிவித்தார்.  அவர் குறிப்பிட்ட ஆலோசனையும் விலாஸ்ராவ் தேஷ்முக்கிற்கு அனுப்பப்பட்டது. பின்னர் அவரது ஆலோசனையின் பேரில் சிறப்பு இடத்துக்கான அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு கூடுதல் தளத்தில் வீடுகள் கட்ட அனுமதி அளிக்கப்பட்டது. 

இநத விஷயத்தில் அரசு அதிகாரிகள் விதிகளை பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டை மறுத்த அவர் எந்த ஒரு விதிமுறையும் மீறப்படவில்லை என்று குறிப்பிட்டார். ஆதர்ஷ் குடியிருப்பு கட்டுவது தொடர்பான ஆவணத்தை தான் 2002, 2004, 2005, 2006 ம் ஆண்டுகளில் பரிசீலித்து ஒப்புதல் அளித்ததாக அவர் கூறினார். விதிமுறைகள் வழிகாட்டுதல்படி அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டதாக அவர் கூறினார். இந்த அடுக்கு மாடி குடியிருப்பில் திவாரியின் மகனுக்கு ஒரு வீடு உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த குடியிருப்பு கார்கில் போரில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அளிப்பதற்காக கட்டப்பட்டது. 

விசாரணை குழுவின் முன் ஆஜராகி பதிலளிக்குமாறு விலாஸ்ராவ் தேஷ்முக்கிற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. விலாஸ்ராவ் தேஷ்முக் இப்போது மத்திய ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சராக உள்ளார். இந்த குழுவின் முன்பு ஆஜராக விருப்பம் இல்லாதவர்கள் தங்களது பதிலை பிரமாண பத்திரமாக இம்மாதம் 23 ம் தேதிக்குள் தாக்கல் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்