ஐ.நா.வில் தீர்மானம்: அமெரிக்காவுக்கு ராஜபக்‌ஷே கண்டனம்

செவ்வாய்க்கிழமை, 4 பெப்ரவரி 2014      உலகம்
Image Unavailable

 

கொழும்பு, பிப். 5 - ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவோம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது இலங்கையை இழிவுபடுத்தும் செயல் என அந்நாட்டு அதிபர் ராஜபக்ஷே தெரிவித்துள்ளார்.

66-வது சுதந்திர தினத்தை ஒட்டி உரையாற்றிய ராஜபக்‌ஷே: இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற புகாரை பெரிதாக்க சில நாடுகள் கடும் முயற்சி செய்து வருகின்றன. அந்த முயற்சி, இலங்கை நீண்ட போராட்டத்திற்குப் பிறகு சொந்த மண்ணில் அமைதியை நிலைநாட்ட எடுத்த முயற்சிகளுக்கு எதிரானதாகும்.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போரில் இலங்கை ராணுவம் என்ன மாதிரியான சவால்களை எதிர் கொள்ள வேண்டியிருந்தது என்பதை பலம் பொருந்திய நாடுகளும் கூட புரிந்து கொள்ள தயாராக இல்லை.

விடுதலைப்புலிகள் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை சுட்டுக் கொன்றது குறித்து எந்த ஒரு நாட்டுக்கும் வருத்தம் இல்லை.விடுதலைப்புலிகள் வலுகட்டாயமாக பள்ளிக் குழந்தைகளை போரில் ஈடுபடுத்தியது ஏன் என யாரும் கேள்வி எழுப்பவில்லை.ஆனால் தற்போது வடக்கு மாகாண மக்கள் பின்னால் மறைந்து கொண்டு இலங்கை உள்நாட்டு விஷயங்களில் தலையிட அந்த நாடுகள் தயாராக இருக்கின்றன. ஜெனீவாவில் கொண்டு வரப்படும் தீர்மானம் இலங்கை மீதான மறைமுக தாக்குதல். இருப்பினும் நாங்கள் இலங்கை இறையான்மையை ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம். இவ்வாறு ராஜபக்‌ஷே தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: