முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உக்ரைனிலிருந்து படைகளை வாபஸ் பெற எச்சரிக்கை

செவ்வாய்க்கிழமை, 4 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், மார்ச்.4 - உக்ரைனின் கிரிமியா பகுதியில் இருந்து ரஷ்ய படைகளை வாபஸ் பெறுமாறு அமெரிக்க அதிபர் ஒபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இதுதொடர்பாக  அவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் சுமார் ஒன்றரை மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்தினார். 

“உக்ரைனில் வாழும் ரஷ்யர்களின் பாதுகாப்பு தொடர்பாக அந்த நாட்டு அரசிடமோ அல்லது ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலின் மூலமோ பேச்சுவார்த்தை நடத்துவதுதான் பொருத்தமாக இருக்கும். ராணுவ நடவடிக்கை சரியான அணுகுமுறை இல்லை. உக்ரைனின் இறையாண்மை, ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் அந்த நாட்டுப் பகுதியில் ரஷ்யப் படைகள் அத்துமீறி நுழைந்திருப்பது கவலையளிக்கிறது. இது சர்வதேச சட்ட விதிமீறல். 1997-ல் உக்ரைனுடன் ரஷ்யா செய்துகொண்ட ஒப்பந்தம் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது” என்று புதினை எச்சரிக்கும் தொனியில் ஒபாமா பேசியுள்ளார். 

வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் புதினின் விளக்கம் குறித்து ரஷ்ய தரப்பில் எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை. 

ரஷ்யாவில் ஜூன் மாதம் ஜி-8 மாநாடு நடைபெற உள்ளது. உக்ரைன் விவகாரத்தால் இந்த மாநாட்டை புறக் கணிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. மேலும் உக்ரைன் அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அளிக்குமாறு மூத்த அதிகாரிகளுக்கு அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.

உக்ரைன் நிலவரம் தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி-மூன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். 

அப்போது கிரிமியா தீபகற்பத்தில் இருந்து ரஷ்ய படைகளை வாபஸ் பெறு மாறு அவர் கேட்டுக் கொண்டார். மேலும் உக்ரைன் அரசுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்துமாறும் அவர் அறிவுறுத்தினார்.

உக்ரைனின் இடைக்கால பிரதமர் ஆர்செனி யாட்சென்யுக் நிருபர்களிடம் பேசியபோது, உக்ரைனில் அமைதி நிலவ ரஷ்யா ஒத்துழைக்க வேண்டும். கிரிமியா மாகாணத்தில் ரஷ்ய ராணுவத்தின் ஊடுருவல் போருக்கான தொடக்கமாகவே தெரிகிறது; இதனால் எதிர்காலத்தில் இருநாடுகளுக்கும் இடை யிலான உறவு முறிந்துவிடும் என்று அவர் எச்சரித்துள்ளார். 

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ரஷ்யர்கள் பெரும்பான்மையாக வசிக் கின்றனர். அங்கு கிரிமியா மாகாணத்தில் உள்ள செவாஸ்டோபோல் நகரில் ரஷ்ய கடற்படைத் தளமும் உள்ளது. 

தற்போது உக்ரைனில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் ரஷ்ய கடற்படைத் தளத் துக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்பதால் அதிபர் புதின் அதிரடியாக ராணுவ நடவடிக்கையில் இறங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. 

இப்போதைய நிலையில் செவாஸ் டோபோல் நகரில் இருந்து கிரிமியா தலைநகர் சிம்பெரோபோல்வரை ரஷ்ய ராணுவ வாகனங்கள் அணிவகுத்துச் செல்கின்றன. ஆனால் அவை எந்த இலக்கை நோக்கி செல்கின்றன என்பது தெரியவில்லை. 

ரஷ்ய ராணுவத்தை எதிர்கொள்ளும் வகையில் உக்ரைன் தலைநகர் கீவில் உக்ரைன் ராணுவம் தயார் நிலையில் உள்ளது. அவர்களுக்கு ஆதரவாக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளும் களத்தில் குதிக்கும் என்று தெரிகிறது. இதனால் பதற்றம் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்