முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மரபணு மாற்ற பயிர்களை சாகுபடி செய்ய அனுமதி இல்லை

சனிக்கிழமை, 8 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

பெய்ஜிங்,மார்ச்.9 - மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுப்பயிர்களை வணிக ரீதியில் சாகுபடி செய்ய அனுமதி தரப்படவில்லை என சீனா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

சீன நாடாளுமன்றத்தின் வருடாந்திர கூட்டம் செவ்வாய்க்கிழமை நடந்தபோது அதையொட்டி பத்திரிகையாளர்களை சந்தித்த உணவு அமைச்சர் ஹான் ஷாங்பூ இதைத் தெரிவித்தார்.

அமைச்சர் ஹான் ஷாங்பூ மேலும் கூறியதாவது:-

மரபணு மாற்றம் செய்யப்பட்ட முக்கிய உணவுப்பொருள்களை வர்த்தக ரீதியில் சாகுபடி செய்ய சீனா ஒப்புதல் கொடுக்கவில்லை. மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுப்பொருள்கள் பாதுகாப் பானது என சந்தேகத்துக்கு இடம் இல்லாமல் நிரூபணமாக வேண்டும் என்பதில் சீனா மிகுந்த கவனமாக இருக்கிறது.

பப்பாளி, பருத்தி ஆகியவற்றைத் தவிர மரபணு மாற்றம் செய்யப்பட்ட வேறு எந்த வேளாண் பயிர்களையும் சாகுபடி செய்ய அனுமதி தரப்படவில்லை.

பூச்சி தாக்குதல் இல்லாத மரபணு மாற்றம் செய்யப்பட்ட நெல் ரகங்களுக்கும் தானிய வகை ஒன்றுக்கும் 2009ல் உயிரி பாதுகாப்பு சான்றை சீனா வழங்கியது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுப்பயிர்களை கள சோதனை நடத்த முதலில் அனுமதி தந்த நாடு சீனாதான்.

ஆனால் மரபணு மாற்ற பயிர்கள் தொடர்பாக சீனா கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டுள்ளது. அனுமதி இல்லாமல் மரபணு மாற்ற பயிர்களை விற்றாலோ சாகுபடி செய்தாலோ அல்லது கள ஆய்வு செய்தாலோ கடுமையான தண்டனை விதிக்கப்படும். மரபணு மாற்றம் செய்த விவசாயப் பொருள்களிலிருந்து தயாரான உணவைத்தான் நானும் எடுத்துக் கொள்கிறேன்.

மரபணு மாற்ற பயிர்கள் பாதுகாப்பானதா இல்லையா என்பதை தனி நபர்களோ துறைகளோ தீர்மானிக்கக்கூடாது. இதை கடுமையான தர நிர்ணய நடைமுறைகளை பின்பற்றி விஞ்ஞானிகள்தான் முடிவு செய்ய வேண்டும்.

மரபணு மாற்ற பயிர் பாதுகாப்பு மேலாண்மை நடைமுறைகளை கண்காணிக்க நிபுணர்கள் அடங்கிய கமிட்டியை சீனா நிறுவியுள்ளது. மரபணு மாற்றம் செய்த 17 வகையான விவசாய உணவுப் பொருள்களுடன் விவர அட்டைகள் இணைக்கப்பட வேண்டும் என்பது சீனாவில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும் ஹான் தெரிவித்தார்.

வர்த்தக சந்தையில் மரபணு மாற்ற விவசாய உற்பத்தி பொருள்கள் அறிமுகம் ஆகி 20 ஆண்டுகள் ஆன பிறகும் அவை மீதான சர்ச்சை ஓயவில்லை. மனிதர் களுக்கு அவை தீங்கு தரக்கூடியதா என்பதில் இதுவரையில் பொதுக்கருத்து ஏற்படவில்லை.

மொத்தம் 28 நாடுகளில் மரபணு மாற்ற பயிர்கள் சாகுபடிக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. சீனாவில் 90 சதவீத சோயா மொச்சை எண்ணெய், மரபணு மாற்ற சோயா மொச்சையிலிருந்தே தயாரிக்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்