முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தை உபரி மின்சாரம் உள்ளதாக மாற்ற நடவடிக்கை

சனிக்கிழமை, 4 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, ஜூன் 4 - உபரி மின்சாரம் உள்ள மாநிலமாக தமிழகத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கவர்னர் உரையில் அறிவித்துள்ளார். நேற்று சட்டசபையில் கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா தமது உரையில்,

கடந்த ஆட்சிக் காலத்தில் மின் பற்றாக்குறையினால் இம்மாநிலத்தின் தொழில் வளர்ச்சி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த அரசு மாநிலத்தின் மின் துறையை சீரமைத்து தமிழகத்தை உபரி மின்சாரம் உள்ள மாநிலமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளும். எதிர்கால கூடுதல் தேவையை கருத்தில்கொண்டு நீண்ட கால மின் செயல்முறை திட்டங்கள் வகுக்கப்பட்டு தொழில் துறைகள் மற்றும் பிற துறைகளுக்கு தங்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க வழிவகை செய்யப்படும். மின் உற்பத்தி, பகிர்மானம், வழங்கல் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தப்படும். மின் திருட்டைத் தடுத்து மின் இழப்பைக் குறைக்க நடவடிக்கை எடுப்பதுடன் தொழிற்சாலைகள், வீடுகள், விவசாயம் போன்றவற்றுக்கான மின் வழங்கிகளைத் தனித்தனியாக அமைத்து மின்சாரம் வழங்கப்படும் தரம் மேம்படுத்தப்படும். உடனடித் தீர்வாக, சொந்த மின் உற்பத்தி நிலையங்களின் உற்பத்தித் திறனை மேம்படுத்துதல், காற்றாலை மின் உற்பத்தியை முழுமையாக பயன்படுத்துதல், தொழில்நுட்ப, வணிக ரீதியான இழப்பைக் குறைப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஒரு நம்பகத்தன்மையுள்ள மாற்று எரிபொருள் ஆதாரமாக மரபுசாரா எரிசக்தியான காற்று, சூரிய ஒளி மற்றும் உயிரி எரிபொருள் மூலம் கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு முன்னுரிமை வழங்கப்படும். மரபு சாரா எரிசக்தி மூலம் மின் உற்பத்தி செய்வதற்காக தனியாக ஒரு கொள்கையை இந்த அரசு வகுக்கும்.

தரமான சாலைகள் மற்றும் சிறப்பான இணைப்பு வசதி ஆகியவை நீடித்த பொருளாதார வளர்ச்சியைப் பெற அவசியமாகிறது. எனவே, இந்த அரசு தரமான சாலைகளை அமைத்து பயண நேரத்தைக் குறைத்து சிறப்பான போக்குவரத்தை அமைக்கப் பாடுபடும். மாநிலத்திலுள்ள அனைத்து மாநில நெடுஞ்சாலைகளும் குறைந்த பட்சம் இருவழித் தடங்கள் கொண்டவையாகவும், மாவட்ட முக்கிய சாலைகள் இடைவழித் தடங்களாகவும், 2014-ம் ஆண்டுக்குள் மாற்றப்படும். 500-க்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட அனைத்து கிராமங்களுக்கும் எல்லா பருவ காலத்திலும் பயன்படுத்தக் கூடிய வகையில் சாலைகள் அமைக்கப்படும். தமிழ்நாடு சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் இரண்டாம் கட்ட செயலாக்கத்திற்கு உலக வங்கியிலிருந்து நிதியுதவி கோரப்படும்.

நாட்டிலேயே அதிக அளவில் நகர்புறமாக மாறியுள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. வேலை தேடி நகர்ப் புறங்களுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சென்னை போன்ற நகரங்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன. ஆனால், அகற்கேற்ப அடிப்படை வசதிகள் வளர்ச்சி பெறவில்லை. இந்த அரசு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் குடிநீர், கழிவுநீர் சுத்திகரிப்பு, திடக்கழிவு மேலாண்மை, சாலைகள் மற்றும் தெருக்கள் மேம்பாடு போன்ற பணிகளை மேற்கொள்ள ஒரு சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்தும், தமிழ்நாட்டின் பிற மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ஒரு சிறப்பு நகர்ப்புற வளர்ச்சி இயக்கம் துவங்கப்படும்.

சென்னை மற்றும் பிற நகரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், நிர்வாகத்திற்குப் பெரும் சவாலை ஏற்படுத்தி வருகிறது. சென்னை மாநகர போக்குவரத்தில் பொதுப் போக்குவரத்தின் பங்கு தற்போது 27 சதவீதம் உள்ளது. இந்த விழுக்காடு 2026-ம் ஆண்டுக்குள் 46 சதவீதத்திற்கு உயர்த்தப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்