முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராம்தேவ் மீது தாக்குதல்: 24 மணி நேர சத்தியாகிரகம் நடத்தப்படும்- பா.ஜ.க. தலைவர் கட்காரி பேட்டி

திங்கட்கிழமை, 6 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,ஜூன்.- 6 - ராம்தேவ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உண்ணாவிரத பந்தலில் இருந்து போலீசாரால் வெளியேற்றப்பட்ட சம்பவத்திற்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பாரதீய ஜனதா, இடதுசாரி கட்சிகள் உட்பட பல்வேறு கட்சிகள் ராம்தேவுக்கு ஆதரவு தெரிவித்து மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. நிருபர்களுக்கு பேட்டியளித்த பா.ஜ.க தலைவர் நிதின் கட்காரி கூறிய போது,
ஊழல் மற்றும் கறுப்பு பணத்திற்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த ராம்தேவின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது. உண்ணாவிரதம் இருந்தவர்கள் நள்ளிரவில் வெளியேற்றப்பட்ட விதம் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. மேலும் அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது கண்டனத்துக்குரியது. இதில் பெண்கள், குழந்தைகள் மிக கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். இது எமர்ஜென்சியை நினைவூட்டுவது போல உள்ளது.
உண்ணாவிரதம் இருந்தவர்கள் மீது விழுந்த ஒவ்வொரு அடியும் ஜனநாயகம் மீது விழுந்த அடியாகும். இதற்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும். டெல்லியில் போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து பாரதீய ஜனதா சார்பில் 24 மணி நேர சத்தியகிரக போராட்டம் நடத்தப்படும். இதில் சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கிறார்கள். பாரதீய ஜனதா சார்பில் அமைதி ஊர்வலம் நடத்தப்படும். ஊழல், கறுப்பு பணத்திற்கு எதிராக பாரதீய ஜனதா தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது.
உண்ணாவிரதம் இருந்தவர்கள் மீது மத்திய அரசு ஏன் இந்த தந்திரமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். இந்த கொடூரமான செயலுக்காக மக்களிடம் சோனியா காந்தி, மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும். காங்கிரஸ் தலைமையிலான ஆளும் அரசு மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டது. எனவே ஆட்சியில் நீடிக்க மத்திய அரசுக்கு தார்மீக உரிமை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்.எஸ்.எஸ். செய்தி தொடர்பாளர் ராம்மகாதேவ் கூறுகையில், இந்தியாவில் ஜனநாயக ஆட்சி நடக்கிறதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஊழலை எதிர்ப்பவர்கள் மீதே அரசு தாக்குதல் நடத்தியிருப்பதன் மூலம் சட்டம் வளைத்து உடைக்கப்பட்டுள்ளது. இது ஒரு கொடூரமான செயல் என்றார். பிரபல வக்கீல் சாந்திபூஷன் கூறுகையில், இது ஒரு அவமானகரமான செயலாகும். இதற்காக பிரதமர் பதவி விலக வேண்டும் என்றார்.
முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண்பேடி கூறுகையில், டெல்லி போலீசாரின் இந்த நடவடிக்கை நியாயமற்றது. நள்ளிரவில் தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது இத்தகைய நடவடிக்கையை எடுத்திருக்க கூடாது. காலை வரை போலீசார் பொறுமையாக இருந்திருக்கலாம் என்றார். சமூக சேவகர் மேதாகட்கர் கூறுகையில், போலீசார் நடத்திய தடியடி மனிதாபிமானமற்ற முறையில் கொடூரமாக இருந்தது. வன்முறை இல்லாமல் நடக்கும் உண்ணாவிரதத்தை எப்படி எதிர்கொள்வது என்று மத்திய அரசுக்கு தெரியவில்லை என்பதையே இது காட்டுகிறது. இதனால் ஊழலை ஒழிக்கும் விஷயத்தில் மத்திய அரசு உண்மையாகவோ, தீவிரமாகவோ, இல்லை என்பது உறுதியாகிறது என்றார். சுவாமி அக்னிவேஸ் கூறுகையில், டெல்லி போலீசார் மிகவும் கண்ணியக்குறைவாக நடந்து கொண்டனர் என்றார். அன்னா ஹசாரேயின் ஆதரவாளரான அரவிந்த் ஹெஜ்ரிவால் கூறுகையில் இந்த உண்ணாவிரதத்தை தடுத்தது ஏன் என்பதற்கு பிரதமர் உரிய விளக்கமளிக்க வேண்டும். இதை எதிர்த்து நாடெங்கும் மக்கள் போராட்டத்தை நடத்த வேண்டும் என்றார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்