முக்கிய செய்திகள்

வெற்றியும் தோல்வியும் மாறிமாறி வருவது இயல்பாம் :கருணாநிதி சொல்கிறார்

வியாழக்கிழமை, 9 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.- 9 - வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வருவது இயல்பாம் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி திருமணவிழாவில் பேசினார். தி.மு.க. அமைப்புச்செயலாளர் கல்யாண சுந்தரத்தின் இல்ல திருமண விழாவில் தி.மு.க. தலைவர் கலந்துகொண்டு பேசியதாவது, இங்கே பேராசிரியர் பேசும் போது தி.மு.க விற்கு அரசியல் மாத்திரம் அல்ல. இதுபோன்ற திருமணங்களை தமிழ் முறைப்படி நடத்துகின்ற அந்த பணியும் தி.மு.க. வின் பணிகளில் ஒன்று தான் என்று குறிப்பிட்டார். இதை யாரும் மறந்துவிட முடியாது. ராஜிவ்காந்தி மறைவுற்றபோது நம்மீது பொய்பழி சுமத்தி மாற்று கட்சியினர் செய்த பிரச்சாரம் காரணமாக நாம் மக்களுடைய பெருவாரியான ஆதரவை இழந்தோம். அதற்கு பிறகு தி.மு.க. பல இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியதை யாரும் மறந்து விட முடியாது. 2நாட்களுக்கு முன்பு ஒரு அம்மையார் சூரியன் மறைந்தது மறைந்தது தான். இனி உதிக்காது என்று சொல்லியிருக்கிறார். ஒரு சின்னப்பிள்ளையை கூப்பிட்டு இன்று சூரியன்மறைந்து விட்டது. நாளை என்னவாகும் என்று கேட்டால் நாளைக்கு மீண்டும் உதிக்கும் என்று சொல்லும். குழந்தைக்கு தெரிந்த உண்மை கூட குவளையத்தை ஆளுகின்ற கோதைகளுக்கு தெரியாதது ஆச்சர்யம் தான். வெற்றியும் தோல்வியும் ஒரு இயக்கத்திற்கு மாறி மாறி வருவது இயல்புதான். தி.மு.க. என்பது ஒரு இயக்கம் அல்ல. ஒரு கட்சியல்ல. அது ஒரு இன உணர்வின் அடையாளம். அந்த இன உணர்வை அழித்துவிட்டு பிறகு தி.மு.க. வை நாங்கள் தோற்கடிப்போம் என்று யாராவது சொன்னால் அவர்களை பைத்தியக்காரர்கள் பட்டியலிலேயே தான் வைக்கவேண்டும். இவ்வாறு கருணாநிதி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: