முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செயல்முறை விளக்கங்களை கொண்டு வகுப்புகள் நடத்தப்படும்

புதன்கிழமை, 15 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.15 - உச்சநீதிமன்றம், சமச்சீர் கல்வி பாடத்திட்ட தரத்தை ஆராய வல்லுநர் குழு அமைக்க உத்தரவிட்டுள்ளதால், இன்று (ஜூன்.15) முதல் பள்ளிகளில் மாணவர்களை மையப்படுத்தி செயல் முறை விளக்கங்களை கொண்டு வகுப்பறைகள் நடத்தப்படுவதுடன், வகுப்புகள் முடியும் தருவாயில் அனைத்து வகுப்புகளுக்கும் தேவையான இலவச பாப்புத்தகங்கள் வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

தமிழ்நாடு சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள் தரம் குறைவாக இருப்பதால் மாணவர்களின் கல்வி நலன் கருதி இத்தரத்தை ஆராய்வதற்காக முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைப்படி கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தத்தை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றம் கொடுத்த இடைக்கால தடை உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு செய்த மேல்முறையீட்டு மனுவில் உச்ச நீதிமன்றம் வல்லுநர் குழு அமைத்து சமச்சீர் கல்வித் திட்டத்தின்கீழ் தயாரிக்கப்பட்ட பாடப்புத்தகங்களின் தரத்தை ஆராய உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் ஏற்கனவே அறிவித்தபடி 15-6-2011 அன்று திட்டமிட்டபடி எல்லாப் பள்ளிகளும் திறக்கப்படும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.

2005-ம் ஆண்டு தேசிய கலைத் திட்ட வடிவமைப்பு மற்றும் 2009-ம் ஆண்டு குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டம் ஆகியவற்றில் குழந்தைகளை மையப்படுத்தி அவர்கள் எளிமையான முறையில் மகிழ்ச்சியுடன் கல்வி கற்கவும் அதன் மூலம் அவர்கள் மனப்பாடம் செய்யும் முறையில் இருந்து மாறுபட்டு சொந்தமாக சிந்திக்கும் திறனை மேம்படுத்தவும் வேண்டுமென குறிப்பிட்டுள்ளன.

ஜெயலலிதா தமிழகத்தின் முலமைச்சராக பொறுப்பேற்றப்பின் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கு முன்னுரிமை கொடுத்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். அதன்படி 2005-ம் ஆண்டு தேசிய கலைத் திட்ட வடிவமைப்பு மற்றும் 2009-ம் ஆண்டு குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டம் ஆகியவற்றில் குறிப்பிட்டுள்ளபடி கல்வித்தரத்தினை உயர்த்துவதற்கு குழந்தையை மையப்படுத்திய இணைப்புப் பயிற்சி வகுப்புகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் முன்ற முறையை எல்லா வகுப்புகளிலும் இக்கல்வியாண்டின் ஆரம்பத்திலேயே அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இன்று பள்ளிகள் திறக்கும் நாளான 15.6.2011 முதல் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இத்திட்டத்தின்படி பாடப்புத்தகத்தை மையப்படுத்தாமல் மாணவர்கள் மையப்படுத்தி செயல்முறை விளக்கங்களைக் கொண்டு வகுப்பறை நடத்தப்படும். இத்திட்டத்தில் குறிப்பிடப்பட்ட வகுப்புகள் முடியும் தருவாயில் அனைத்து வகுப்புகளுக்கும் தேவையான இலவச பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும்.

ஆகவே, கல்வி நிறுவனங்கள் எவ்வித குழப்பத்திற்கும் இடம் கொடுக்காமல் நல்ல முறையில் இந்த கல்வியாண்டில் அரசால் அறிமுகப்படுத்தப்பட இருக்கும் இத்திட்டத்தை கடைப்பிடித்து மாணவர்களுக்கு கல்வி கற்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மாணவர்களின் கல்வி நலனில் என்றும் அக்கறை கொண்டுள்ள முதலமைச்சர் இந்த அரசு நல்ல முறையில் கல்வி கற்பிக்க எல்லா ஏற்பாடுகளும் செய்துள்ள நிலையில் பெற்றோர்களும் மாணவர்களும் எவ்வித குழப்பமும் இன்றி நல்ல முறையில் கல்வி பயிலுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்