முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் விவசாய அதிகாரிகளுடன் ஆலோசனை

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.19 - முதல்வர் ஜெயலலிதா, இரண்டாம் பசுமைப்புரட்சி உருவாகும் வகையில் செயல்பட விவசாய மற்றும் உயர் அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தி, உரிய ஆலோசனைகளையும் வழங்கினார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று முன்தினம் (17-ந்தேதி)  தலைமை செயலகத்தில் வேளாண்மைத்துறையின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் மேம்படவும், விளைப்பொருட்களின் உற்பத்தியை மேம்படுத்திடவும், வேளாண் நிலப்பரப்பினை அதிகரிக்கவும் முதல்வர் ஜெயலலிதா விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகத்தில் இரண்டாம் பசுமை புரட்சியை ஏற்படுத்தி, நெல், கரும்பு, பருத்தி, பயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரித்து, விவசாய பெருங்குடி மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்குமாறு முதல்வர் ஜெயலலிதா அதிகாரிகளுக்கு ஆணையிட்டார்.

மாநிலத்தில் வேளாண்மை வளர்ச்சிக்கு தேவையான நீராதாரம், விதை உற்பத்தி, உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவை விவசாயிகளுக்கு தேவையான அளவு தட்டுப்பாடின்றி கிடைக்கவும்,   கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க் கடன் வசதிகளை பெறுவதற்கும், விவசாயிகளிடையே தொழில்நுட்ப வசதிகளை அதிகரித்து அவர்களிடையே தகவல் பரிமாற்ற வசதிகளை அதிகரிக்கவும், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை வழங்கினார்.

தமிழக மக்களுக்கு என்றென்றும் உணவு பாதுகாப்பு அளிக்கப்படும் பொருட்டு, உணவு பொருட்களின் உற்பத்தியை இரண்டு மடங்காக்கவும், விவசாயிகளுக்கு கிடைக்கும் வருமானத்தை தற்போதுள்ள நிலையிலிருந்து இரண்டு அல்லது மூன்று மடங்காக உயர்த்தி, உழைப்பின் பயனை அவர்கள் பெற்றிடவும், விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு சந்தையில் நல்ல விலை கிடைத்திட வேளாண் வணிக மையங்களின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, நுண்ணிய பாசன முறையை மேம்படுத்திட முதல்வர் ஆணையிட்டார்.

மேலும், இந்த ஆய்வின்போது முதல்வர் வேளாண்துறை அதிகாரிகளுக்கு பல அறிவுரைகளை வழங்கினார்.

தமிழக முதல்வர் நடப்பு 2011-12-ம் ஆண்டில் 42 லட்சம் ஹெக்டேரில் 115 லட்சம் மெட்ரிக் டன் உணவு உற்பத்தி செய்ய தேவையான அனைத்து முயற்சிகளையும் தொய்வின்றி செய்ய அறிவுறுத்தினார். தமிழ்நாட்டிலுள்ள அணைகளில் உரிய நேரத்தில் நீர்பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட்டுள்ள வாய்ப்பினை பயன்படுத்தி, நடப்பு கார், குறுவை, சொர்ணவாரி பருவத்தில் 3.2 லட்சம் ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்படுவதை உறுதி செய்ய அறிவுரை வழங்கினார். 

நடப்பு ஆண்டில் 9 இலட்சம் ஹெக்டேர் பரப்பளவில் திருந்திய நெல் சாகுபடி மேற்கொள்ள ஊக்குவிக்கப்பட வேண்டும். விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறையை ஈடுசெய்யும்விதமாக துல்லிய சமன்படுத்தும் கருவி, விசை கோனோ - களை எடுக்கும் கருவி, நெல் நடவு இயந்திரம், நெல் அறுவடை இயந்திரம், கரும்பு அறுவடை இயந்திரம் போன்ற வேளாண் இயந்திரம் மற்றும் கருவிகளை வேளாண் பொறியியல் துறை மற்றும் வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் மிக குறைந்த வாடகைக்கு கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும்.

நீடித்த நிலையான கரும்பு முனைப்புத்திட்ட தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி, 4,000 ஹெக்டேர் பரப்பில் கரும்பு உற்பத்தி திறனை பெருக்க ஆவன செய்யப்பட வேண்டும். பயறு வகைகள் சாகுபடியினை தீவிரப்படுத்தி துவரை, உளுந்து, பச்சைப்பயறு போன்ற பயறு வகை பயிர்களை தனிப் பயிராக சாகுபடி செய்யும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். துல்லிய பண்ணையம் தொழில்நுட்பம் பெருமளவில் செயல்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 5,000 ஹெக்டேர் பரப்பில் மா, முந்திரி மற்றும் வாழை பயிர்களில் மிக அடர்த்தி நடவுமுறை மேற்கொள்ளப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நெல்லி மற்றும் எலுமிச்சை சாகுபடிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு 1700 ஹெக்டேர் பரப்பில் சாகுபடி மேற்கொள்ளப்பட வேண்டும். தகவல் தொழில்நுட்பம் மூலம் விவசாயிகளுக்கு முக்கிய தொழில்நுட்பங்கள் குறித்த விவரங்களை விரிவாக்க  பணியாளர்கள் மூலம் விரைந்து அளிக்க  நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

இவ்வாய்வுக் கூட்டத்தில் நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வேளாண்மைத்துறை அமைச்சர், கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் தலைமை செயலாளர், நிதித்துறையின் முதன்மை செயலாளர், வேளாண்மைத்துறையின் முதன்மை செயலாளர், வேளாண்மைத்துறை, தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மற்றும் சர்க்கரைத்துறை ஆகிய துறைகளின் ஆணையர்கள், விதைச்சான்று துறையின் இயக்குநர் மற்றும் வேளாண்மை பொறியியல் துறையின் தலைமை பொறியாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்