முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனிமொழியை சந்திக்க கருணாநிதி டெல்லி பயணம்

புதன்கிழமை, 22 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை,ஜூன்.- 22 - ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தன் மகள் கனிமொழியை சந்திப்பதற்காக தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி நேற்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லியில் திஹார் சிறையில் உள்ள தன் மகளை கருணாநிதி பிறகு சந்தித்தார். 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ராசா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடி கைமாறிய விவகாரம் தொடர்பாக அந்த டி.வியின் பங்குதாரர்களில் ஒருவரான கனிமொழி எம்.பி, மற்றும் அந்த டி.வியின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோர் கடந்த மே 20 ம் தேதி கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் முதலில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தனர். அங்கு அந்த மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் டெல்லி ஐகோர்ட்டை அனுகினார்கள். அங்கும் இவர்களது ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. பின்னர் கடைசி வாய்ப்பாக சுப்ரீம் கோர்ட்டை அனுகினார்கள். சுப்ரீம் கோர்ட்டும் கனிமொழி மற்றும் சரத்குமார் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தது. குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்படும் வரை காத்திருக்குமாறு இருவரையும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கேட்டுக் கொண்டார்கள். அதன் பிறகு சி.பி.ஐ. கோர்ட்டில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யலாம் என்றும் நீதிபதிகள் கூறினர்.
தன் மகளுக்கு ஜாமீன் நிராகரிக்கப்பட்டதை கேள்விப்பட்டதும் தி.மு.க. தலைவர் கருணாநிதி பெரும் வேதனையடைந்தாராம். கலங்கிப் போயிருக்கும் அவர் டெல்லி சென்று தன் மகளை சந்திக்க முடிவெடுத்தார். அதன்படி நேற்று காலை 8.50 மணிக்கு தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் தி.மு.க மூத்த தலைவர்கள் துரைமுருகன், பொன்முடி ஆகியோரும் உடன் சென்றனர். நேற்று மாலை திஹார் சிறைக்கு சென்ற கருணாநிதி அங்கு தன் மகளை சந்தித்தார். அப்போது அவர் கண்கலங்கினார். பின்னர் கருணாநிதி சிறையில் இருந்து வெளியே வந்தார். டெல்லியில் கருணாநிதி இன்னும் ஓரிரு நாட்கள் தங்கியிருக்க கூடும் என்று தி.மு.க வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் அப்போது காங்கிரஸ் கூட்டணி தலைவர்களை அதாவது உயர் மட்டத் தலைவர்களை அவர் சந்திக்க மாட்டார் என்று கூறப்படுகிறது. ஓரிரு நாட்கள் கழித்து கருணாநிதி சென்னை திரும்புவார் என்று தெரிகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்