முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோபியில் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

கோபி,ஜூன்.27 - ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் நகராட்சி பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று தமிழக வேளாண்மை துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார். கோபி நகர ஒருங்கிணைந்த வளர்ச்சி அறக்கட்டளையின் சார்பில் பொதுமக்கள் குறைகேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் பேசியதாவது, 

கோபி பகுதியில் தீயணைப்பு துறைக்கு சொந்தமான கட்டிடம் கட்டுவதற்கு பொலவகாளிபாளையத்தில் உள்ள தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறைக்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடத்தில் போதுமான வசதி இல்லாததால் மீண்டும் இடம் தேர்வு குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கோபி நகராட்சி பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. அதனை போக்க ரிங்ரோடு அமைக்க முடிவு செய்து கோபி நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி கொடுக்க கூறியுள்ளேன். இதற்கான திட்ட மதிப்பீடு பணிகளில் தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 

பொதுமக்கள் குறைகளை கேட்க 4 இடங்களில் புகார் பெட்டிகள் வைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கோபி பகுதியில் சமுதாயக் கூடங்கள் சுத்தம் செய்யப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். கடந்த மைனாரிட்டி கருணாநிதி ஆட்சிக் காலத்தில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக சாலை அமைக்கும் பணி பாதிக்கப்பட்டது. அதன் பிறகு பாதாள சாக்கடை திட்டம் கைவிடப்பட்டது. தற்போது கோபி நகராட்சி பகுதிகளில் 70 சதவீதம் சாலை பணிகள் முடிவடைந்து விட்டன. எஞ்சியுள்ள பணிகள் இன்னும் 6 மாதத்தில் முடிக்கப்படும். கோபி அருகே உள்ள காட்டடிபாளையம் பகுதியில் விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரியுள்ளனர். அதற்காக தமிழக வட்டார போக்குவரத்து மற்றும் காவல் துறை அதிகாரிகள் மூலம் ஒரு வாரத்துக்குள் விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

ஈரோடு நகராட்சி பகுதியில் முன்னாள் நகராட்சி தலைவர் தியாகி லட்சமண அய்யரின் முழு உருவச் சிலை அமைக்கப்படும். அதற்கான செலவு அனைத்தையும் நானே ஏற்றுக் கொள்கிறேன். தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்காலை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கோபி நகராட்சி பகுதியில் தற்போது 3 வது குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நகராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் 3 பைப் லைன்களில் ஒரு லைனுக்கு மட்டுமே புதிய குழாய் அமைக்கப்பட்டுள்ளது. மற்ற லைன்களுக்கும் புதிய குழாய் அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்படும். தி.மு.க. ஆட்சியில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டதால் கோபி நகராட்சி பகுதியில் குடிநீர் விநியோகம் சரிவர செய்ய முடியவில்லை. முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்ற பின் மின்துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து மின்தடைக்கு விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருகிறார். கோபி நகராட்சி பொதுமக்களின் நீண்ட நாள் பிரச்சினையான குடிநீர் பிரச்சினைக்கு முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையை பெற்று குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்