சிங்கூர் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் டாடா அப்பீல்

புதன்கிழமை, 29 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஜூன்.29 - சிங்கூர் பகுதியில் கைப்பற்றப்பட்ட நிலத்தை மீண்டும் சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கே கொடுப்பதற்கு தடை விதிக்க மறுத்து பிறப்பித்த கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து சுப்ரீம்கோர்டிட்ல டாடா குழுமம் சார்பாக அப்பீல் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேற்குவங்காளத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி பொறுப்பேற்ற பின்பு மாநில சட்டசபையில் சிங்கூர் பகுதியில் தொழிற்சாலை கட்டுவதற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில் சிங்கூர் நிலம் மறுவாழ்வு மற்றும் வளர்ச்சி சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் சிங்கூர் பகுதியில் கையகப்படுத்தப்பட்ட நிலம் மீண்டும் விவசாயிகளிடத்தில் ஒப்படைக்கப்பட்டுவிடுமோ என்று டாடா குழுமத்தினர் அச்சத்தில் உள்ளனர். மேலும் சிங்கூர் பகுதி விவசாயிகளுக்கு அந்த நிலைத்தை மீண்டும் விநியோகிக்க தடை விதிக்க முடியாது என்று கொல்கத்தா ஐகோர்ட்டும் உத்தரவு பிறபிப்பித்துள்ளது. இந்த இரண்டையும் எதிர்த்து டாடா குழுமத்தினர் நேற்று சுப்ரீம்கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். சிங்கூர் பகுதியில் டாடா குழுமத்தினருக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை அரசு எடுத்துக்கொள்ளவும் தடை செய்யவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் 25-ம் தேதிக்கு பின்னர் அரசு ஏற்கனவே கையகப்படுத்தியுள்ள நிலத்தை திருப்பி அளிக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் டாடா குழுமத்தினர் கூறியுள்ளனர். இந்த மனுமீதான விசாரணை இன்று நடக்கிறது. சிங்கூர் பகுதியில் கையகப்படுத்தப்பட்ட நில விவகாரத்தில் தலையிட கோர்ட்டு விரும்பவில்லை என்று கூறிவிட்டால் அந்த நிலம் மீண்டும் உரியவர்களுக்கே கொடுக்கப்படலாம் என்று டாடா குழுமத்தினர் அச்சத்தில் இந்த அப்பீல் மனுவை தாக்கல் செய்திருப்பதாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: