முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லஞ்ச ஒழிப்பு ஆணையராக பிரதீப் குமார் நியமனம்

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூலை 2011      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி,ஜூலை.3 - மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையராக தற்போது ராணுவ செயலாளராக இருக்கும் பிரதீப் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று டெல்லியில் நடந்த கூட்டத்தில் ஒருமித்த கருத்துடன் இந்த முடிவு எடுக்கப்பட்டது. 

மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையராக பி.ஜே.தாமஸ் இருந்தார். ஊழல் ஒழிப்பு ஆணையராக இருப்பவர் நேர்மையானவராகவும், லஞ்ச ஊழல் எதிலும் ஈடுபடாதவராகவும் இருக்க வேண்டும். மத்திய லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணையராக தாமஸ் நியமிக்கப்படுவதற்கு முன்பு கேரள மாநிலத்தில் உணவுத்துறை செயலாளராக இருந்தார். அப்போது வெளிநாடுகளில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்யப்பட்டது. இதில் ரூ.4 கோடி ஊழல் நடந்துள்ளது என்று அப்போது முதல்வராக இருந்த கருணாகரன் மற்றும் பி.ஜே.தாமஸ் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த ஊழல் வழக்கு மீதான விசாரணை திருவனந்தபுரத்தில் தனிக்கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணையை நிறுத்திவைக்கக்கோரி சுப்ரீம்கோர்ட்டில் கருணாகரன் தடை வாங்கியிருந்தார். இந்தநிலையில் மத்திய தொலைதொடர்புத்துறை செயலாளராக பி.ஜே. தாமஸ் நியமிக்கப்பட்டார். அதனையடுத்து மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையராக நியமிக்கப்பட்டார். பி.ஜெ. தாமஸ் மீது ஏற்கனவே ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறது. அதனால் அவரை ஆணையராக நியமிக்கக்கூடாது என்று தேர்வுக்குழுவில் இடம்பெற்றிருந்த எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறினார். அதையும் மீறி பி.ஜே.தாமஸ் ஆணையராக நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் பிரச்சினை தலைதூக்கியதால் பி.ஜே.தாமஸ் நியமனத்திற்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவரை மத்திய லஞ்ச ஒழிப்பு கமிஷனராக நியமிக்கப்பட்டததை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம்கோர்ட்டு பி.ஜே.தாமஸ் நியமனம் செல்லாது என்று அறிவித்தது. கடந்த மார்ச் மாதம் 3-ம் தேதி இந்த தீர்ப்பை சுப்ரீம்கோர்ட்டு அளித்தது. அதில் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பி.ஜே. தாமஸை ஆணையராக நியமிக்கப்பட்டது செல்லாது. இனிமேல் லஞ்ச ஒழிப்பு ஆணையர் நியமன விஷயத்தில் கடுமையான விதிமுறைகளை மத்திய அரசு பின்பற்ற வேண்டும். பி.ஜே.தாமஸ் மீது கூறப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டை ஆராயாமல் அவரை கடந்த 2010-ம் ஆண்டு செப்டம்பர் 3-ம் தேதி ஆணையராக நியமனம் செய்தது சட்டவிரோதமானது என்று கூறப்பட்டுள்ளது. 

இந்த தீர்ப்பு வழங்கி 3 மாதமாகியும் புதிய ஆணையர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் பிரதமர் தலைமையிலான தேர்வு குழுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. பிரதமர் மன்மோகன் சிங் வீட்டில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் குழுவில் இடம்பெற்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் ஆகிய மூவரும் கலந்துகொண்டனர். ஆணையராக நியமிப்பது குறித்து  பாதுகாப்பு செயலாளர் பிரதீப் குமார், முன்னாள் உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை, முன்னாள் ரசாயனம் மற்றும் உரத்துறை செயலாளர் பிஜோய் சாட்டர்ஜி சட்டவிவகாரத்துறையின் முன்னாள் செயலாளர் வி.கே.பேசின், முன்னாள் நகர்புற வளர்ச்சித்துறை செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் பெயர்களை மத்திய அதிகாரிகள் மற்றும் ஊழியர் நலத்துறை தயார் செய்து குழுவின் ஆய்வுக்கு வைத்தது. இறுதியில் மத்திய லஞ்ச ஒழிப்பு புதிய ஆணையர் ஒருமித்த கருத்துடன் தேர்வு செய்யப்பட்டதாக பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார். பாதுகாப்பு செயலாளராக இருந்த பிரதீப் குமார், ஆணையராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்