முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்மநாபா சுவாமி கோவில் நகைகளை வீடியோ படம் எடுக்க சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு

புதன்கிழமை, 6 ஜூலை 2011      ஆன்மிகம்
Image Unavailable

புதுடெல்லி,ஜூலை.- 7 - பத்மநாபாசுவாமி திருக்கோயிலின் ரகசிய அறைகளில் இருந்து எடுக்கப்பட்ட நகைகளை வீடியோ படம் எடுக்கும்படி சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம் தலைநகர் திருவனந்தபுரத்தின் மையப்பகுதியில் பத்மநாபா சுவாமி திருக்கோயில் இருக்கிறது. இந்த கோயிலின் ரகசிய அறைகளில் இருந்து இதுவரை எடுக்கப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.1.5 லட்சம் கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு அறையிலும் தங்கம், வைரம், வைடூரிய நகைகள், பொற்குவியல்கள் இருந்தது. மொத்தம் உள்ள 6 ரகசிய அறைகளில் பி அறையைத் தவிர மற்ற அறைகள் திறக்கப்பட்டுவிட்டன. பி அறை இரும்பு திரைகளால் மூடப்பட்டு இருப்தால் அதை திறக்க முடியவில்லை. நிபுணர் குழு வரவழைக்கப்பட்டு அறையை திறப்பது குறித்து வருகின்ற 8-ம் தேதி இறுதி முடிவு எடுக்கப்படுகிறது. பி அறையை திறந்தால் நாட்டுக்கு ஆபத்து என மகாராஜா குடும்பம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியது. ஆனால் இதை மகாராஜா குடும்பத்தினர் மறுத்து உள்ளனர்.
இந்தநிலையில் ரகசிய அறைகளில் எடுக்கப்பட்டுள்ள நகைகள் மற்றும் ஆபரணங்களை வீடியோ படம் எடுக்கும்படி சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. ரகசிய அறைகளில் கண்டுபிடிக்கப்பட்டு எடுக்கப்பட்ட நகைகளின் பட்டியலையும் சமர்ப்பிக்க வேண்டும். இனிமேல் ரகசிய அறைகள் திறந்தால் பத்மநாபா சுவாமி கோயில் தேவஸ்தான செயலாளர் முன்னிலையில் திறக்க வேண்டும். அல்லது தேவஸ்தானம் நியமிக்கும் உறுப்பினர் முன்னிலையில் திறக்க வேண்டும். மேலும் ரகசிய அறைகள் திறக்கப்படும்போது கிடைக்கும் நகைகள் மற்றும் ஆபரணங்களை தொல்பொருள் ஆய்வுத்துறை உயரதிகாரிகள் முன்பு பட்டியலிட வேண்டும். ரகசிய அறையை திறப்பது குறித்த ஏற்பாடுகளை நீதிபதி கிருஷ்ணன் பொறுப்பில்தான் செய்ய வேண்டும் என்றும் எப்போது அறையை திறப்பது குறித்து முடிவை அவர்தான் எடுக்க வேண்டும் என்றும் சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony