முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்மநாபசுவாமி கோயில் பொக்கிஷங்கள் - நிபுணர்கள் கருத்து

வெள்ளிக்கிழமை, 8 ஜூலை 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

திருவனந்தபுரம்,ஜூலை.8 - திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் பாதாள அறைகளில் இதுவரை கிடைத்துள்ள தங்க, வைர ஆபரணங்கள் உள்ளிட்டவற்றின் மதிப்பு ரூ. 2 லட்சம் கோடிக்கு மேல் இருக்கும் என்று மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் வரலாற்று வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வரலாற்று சிறப்பு மிக்க பத்மநாபசுவாமி கோயிலில் மொத்தமுள்ள 6 பாதாள அறைகளில் 5 அறைகளை சுப்ரீம் கோர்ட் அமைத்துள்ள ஒய்வு பெற்ற நீதிபதிகள் 7 பேர் அடங்கிய குழு திறந்து ஆய்வு நடத்தி அதில் உள்ள பொருட்களை கணக்கெடுத்து வருகிறது. இதுவரை திறக்கப்பட்ட அறைகளில் தங்கம், வைர ஆபரணங்கள், அரிய விலைமதிப்பில்லா நவரத்தின கற்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர். இதுவரை 5 பாதாள அறைகளில் கிடைத்துள்ள பொக்கிஷங்களின் மதிப்பு ரூ. 2 லட்சம் கோடியாக இருக்கும் என்று மூத்த அரசு அதிகாரிகள், மத தலைவர்கள், வரலாற்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கோயிலுக்கு திருவிதாங்கூர் மன்னர்கள் போர்ச்சுக்கல், நெதர்லாந்து, இங்கிலாந்து, தூரக்கிழக்கு நாடு வர்த்தகர்கள் ஆகியோர் ஏராளமாக அரிய விலை மதிப்பற்ற பொருட்களை காணிக்கையாக அளித்துள்ளதாக கேரள மாநில முன்னாள் தலைமை செயலர் ஆர். ராமசந்திர நாயர் தெரிவித்துள்ளார். 

ராஜராஜ சோழன், கிருஷ்ணதேவராயர் உள்ளிட்ட அரசர்களும் அரிய பொருட்களை காணிக்கையாக அளித்துள்ளதாக கூறப்படுகிறது. பாதாள அறைகளில் கிடைத்துள்ள பொக்கிஷங்களின் இன்றைய சந்தை மதிப்பு ரூ. 5 லட்சம் கோடியாக இருக்கும் என்பதுடன் உலகின் செல்வந்தர் கோயில்கள் வரிசையில் முதல் இடத்தில் இந்த கோயில் இருக்கும் என்று மற்றொரு ஓய்வு பெற்ற தலைமை செயலர் நாயர் கூறினார். 

6 வது அறை பலத்த பாதுகாப்புடன் இரும்புக் கதவு, மரக் கதவு, மற்றொரு இரும்பிலான கதவுகளை கொண்டுள்ளது. இதை பார்க்கும் போது அதில் விலை மதிப்பில்லாத அரிய பொக்கிஷங்கள் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. எஞ்சிய 6 வது அறையை திறக்க நிபுணர்களின் உதவி கோரப்பட்டுள்ளது. அடுத்த வார இறுதியில் இது திறக்கப்பட்டு அதில் உள்ள பொருட்கள் கணக்கெடுக்கப்படும். இந்நிலையில் பாதாள அறைகளில் கிடைத்த அனைத்தும் பொருட்களும் கோயிலுக்கு சொந்தமானது என்றும் அதில் அரசு உரிமை கோராது என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!