முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிவகங்கையில் அ.தி.மு.க. இன்று ஆர்ப்பாட்டம் - ஜெயலலிதா

திங்கட்கிழமை, 28 பெப்ரவரி 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.1 - 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலுக்கு மூலக் காரணமான கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், சிவகங்கை மாவட்டத்தில் நிலவி வரும் அவல நிலைக்குக் காரணமான மைனாரிட்டி தி.மு.க. அரசைக் கண்டித்தும், சிவகங்கை மாவட்டம் அ.தி.மு.க.  சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (1.3.2011 ​ செவ்வாய்க் கிழமை) நடைபெறும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் மூலம் தன் மக்கள் நலனில் அக்கறை செலுத்துவதில் தனக்கு நிகர் யாருமில்லை என்பதை நிரூபித்து இருக்கிறார் மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி. 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் பணம் கருணாநிதி குடும்பத்தினரை சென்றடைந்து இருக்கிறது என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பயனடைந்த நிறுவனத்திடமிருந்து கருணாநிதியின் குடும்பத் தொலைக்காட்சிக்கு 214 கோடி ரூபாய் அளவுக்கு பணம் கைமாறியது; சென்னை அண்ணா சாலையில் 55,000 சதுர அடி நிலம் கருணாநிதியின் துணைவி ராசாத்தியின் பினாமிக்கு அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டது; கோத்தகிரியில் உள்ள விண்ட்ஸர் எஸ்டேட்டை கனிமொழிக்காக ராசாத்தியின் பினாமி அடிமாட்டு விலைக்கு வாங்கியது; 675 கோடி ரூபாய் பணத்தை ஏர்செல் நிறுவனம் சன் குழுமத்தில் முதலீடு செய்தது  என அடுக்கிக் கொண்டே போகும் அளவுக்குக் கருணாநிதி குடும்பத்தினரின் ஈடுபாடு 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலில் இருந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த அளவுக்கு கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் ஊழலில் ஈடுபட்டும், அவர்களை விசாரிக்கவோ, கைது செய்யவோ இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 

 இதற்குக் காரணம் கருணாநிதிக்கு மத்தியில் உள்ள செல்வாக்கு தான் என்று கூறப்படுகிறது.  இது தான் கருணாநிதியின் தன் மக்கள் நலப் பணி. தமிழக மக்கள் பணி என்பது தரம் தாழ்ந்து கிடக்கிறது. உதாரணமாக, சிவகங்கை மாவட்டத்தை எடுத்துக் கொண்டால், மைனாரிட்டி தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற போது சிவகங்கை நகராட்சியில் ஆரம்பிக்கப்பட்ட பாதாள சாக்கடைத் திட்டம் இன்னமும் முடிக்கப்படாமல் உள்ளதாகவும், இதே நிலைமை தான் காரைக்குடி மற்றும் தேவகோட்டை நகராட்சிகளிலும் nullடிக்கிறது என்றும், சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு சாலைகள் குண்டும், குழியுமாகக் காட்சி அளிப்பதாகவும், அண்மையில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுநாள் வரை நிவாரண உதவி வழங்கப்படவில்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.  மேலும், சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தொகுதியில் குறிப்பிட்ட சர்வே எண்களில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் மக்கள் தங்கள் இடங்களை விற்க முடியாத அளவுக்கு அரசு தடையாணை போட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது மட்டுமல்லாமல், விஷம் போல் ஏறும் விலைவாசி மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் எந்தவிதமான நடவடிக்கையையும் மைனாரிட்டி தி.மு.க. அரசு எடுப்பதாகத் தெரியிவில்லை. 

எனவே, 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலுக்கு மூலக் காரணமான கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், சிவகங்கை மாவட்டத்தில் நிலவி வரும் அவல நிலைக்குக் காரணமான மைனாரிட்டி தி.மு.க. அரசைக் கண்டித்தும், மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றித் தர வலியுறுத்தியும், காரைக்குடி தொகுதியில் உள்ள சில இடங்களை விற்பதற்கும், வாங்குவதற்கும் விதித்துள்ள தடையாணையை ரத்து செய்ய வலியுறுத்தியும், சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க சார்பில் இன்று (1.3.2011 செவ்வாய்க் கிழமை) காலை 10 மணியளவில், காரைக்குடி தாலுகா அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம்,  மகளிர் அணிச் செயலாளர் எஸ். கோகுல இந்திரா தலைமையிலும், சிவகங்கை மாவட்ட செயலாளர்  சோழன் சித. பழனிச்சாமி  முன்னிலையிலும் நடைபெறும்.

இந்தக்  கண்டன ஆர்ப்பாட்டத்தில், சிவகங்கை மாவட்ட நிர்வாகிகளும், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெ ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை  உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ள வேண்டும்.

தோழமைக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்கள் நலனை முன் வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்கள் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு ஆதரவு நல்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்