மத்திய அரசின் பட்ஜெட் - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, 1 மார்ச் 2011      அரசியல்
Sushma

 

புதுடெல்லி, மார்ச் 1 - மத்திய அரசின் பட்ஜெட் மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது என்றும் குறிக்கோளற்ற பட்ஜெட் என்றும் பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

மத்திய அரசின் 2011 - 12ம் ஆண்டிற்கான பட்ஜெட் ஏமாற்றமளிக்கிறது என்று பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளன. மத்திய அரசின் 2011 - 12-ம் நிதியாண்டிற்கான நிதி நிலை அறிக்கையை (பட்ஜெட்டை) மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட் குறித்து பல்வேறு எதிர்க்கட்சிகளும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளன.

பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரும்,  லோக்சபை எதிர்க்கட்சி தலைவருமான சுஷ்மா சுவராஜ் இந்த பட்ஜெட் குறித்து கருத்து தெரிவிக்கையில், இது ஏமாற்றமளிக்கும் பட்ஜெட் என்றார்.

வேலையில்லா திண்டாட்டம் என்ற வார்த்தை கூட பட்ஜெட்டில் குறிப்பிடப்படவில்லை என்றும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது குறித்து பட்ஜெட்டில் எதுவும் சொல்லப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

சாதாரண மக்களுக்கு இந்த பட்ஜெட் எந்த பலனையும் தராது என்றும், இந்த பட்ஜெட்டினால் பெண்கள், இளைஞர்கள் யாருக்கும் பலனில்லை என்றும் அவர் கூறினார்.

அங்கன்வாடி பணியாளர்களுக்கும், உதவியாளர்களுக்கும் சன்மானம் உயர்த்தப்பட்டிருக்கிறதைத் தவிர வேறு எந்த பலனும் இதில் இல்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தலை கணக்கில் வைத்து தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் இது என்றும்,  இது வழக்கமான பட்ஜெட்தான். இதில் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு விஷயம் எதுவும் இல்லை என்றும் இடதுசாரி கட்சிகள் கூறியுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்: