முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக அரசுக்கு வைகோ வேண்டுகோள்

வியாழக்கிழமை, 21 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.21 - 2008 ல் தி.மு.க. ஆட்சியில்  நெல்லை மாவட்டத்திலிருந்து பிரித்து தூத்துக்குடி மாவட்டத்தில் சேர்க்கப்பட்ட இளையரசனேந்தல் உள்ளிட்ட 12 ஊராட்சியை மீண்டும் நெல்லை மாவட்டத்தில் இணைத்திட வேண்டும் வைகோ  தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வை.கோபால்சாமி விடுத்துள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டம், குருவிகுளம் ஒன்றியம்,இளையரசனேந்தல் வருவாய் ஆய்வாளர் பகுதிக்கு உட்பட்ட (பிர்க்கா)இளையரசனேந்தல், அய்யனேரி, அப்பனேரி, ஜமீன் தேவர்குளம்,வடக்குப்பட்டி, புளியங்குளம், சித்திரம்பட்டி, பிள்ளையார்நத்தம், நக்கலமுத்தன்பட்டி, பிச்சைத்தலைவன்பட்டி, முக்கூட்டுமலை, வெங்கடாசலபுரம் ஆகிய பன்னிரெண்டு ஊராட்சிப் பகுதிகளை, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வருவாய் கோட்டம் மற்றும் கோவில்பட்டி ஒன்றியப் பகுதியில் இணைத்து, 01.05.2008 முதல் அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு

உள்ளது.

பொதுவாக ஒரு மாவட்ட எல்லைப்பகுதியை, இன்னொரு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியாக மாற்றும்போது, அந்தப் பகுதி மக்கள், தொண்டுநிறுவனங்கள், மக்கள் பிரதிநிதிகளிடம் கருத்துக் கேட்டு, பெரும்பான்மை அடிப்படையில் முடிவு எடுக்க வேண்டும் என்ற நடைமுறை, இந்நிகழ்வில் பின்பற்றப்படவில்லை. இந்த பன்னிரெண்டு ஊராட்சிப் பகுதியைச் சேர்ந்த மக்கள், தங்களின் பட்டா மாறுதல், பள்ளிக் குழந்தைகளுக்கான சாதிச் சான்றிதழ், திருமண நிதி உதவி,

காவல்நிலைய உதவி போன்ற தேவைகளுக்காக, கோவில்பட்டி வருவாய் கோட்டம், கோவில்பட்டி ஒன்றியம், காவல் நிலையங்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தை அணுகும்போது காலதாமதத்திற்கும் பெரும் அலைச்சலுக்கும் இன்னலுக்கும் உள்ளாகிறார்கள்.  ​எனவே, மேற்கண்ட பன்னிரெண்டு ஊராட்சிகளுள், பதினொரு ஊராட்சித் தலைவர்கள், தொடர்ந்து நெல்லை மாவட்டத்திலேயே தங்கள் பகுதிகள்  இருக்கின்ற வகையில் மாற்றி அமைத்திட வேண்டுமென தமிழக முதல் அமைச்சர், வருவாய் நிர்வாக முதன்மைச் செயலாளர், திருநெல்வேலி மாவட்ட

ஆட்சியர் ஆகியோருக்குக் கோரிக்கை விண்ணப்பங்களை அனுப்பி உள்ளனர். தத்தமது ஊராட்சிமன்றங்களிலும் தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளனர்.  பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள், பல அரசியல் கட்சியினரும்  திருநெல்வேலி வருவாடீநு மாவட்டத்திலேயே தொடர்ந்து இப்பகுதிகள் இருக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். 

 திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர், ஜூன் 29 அன்று முக்கூட்டுமலை ஊராட்சியை இரண்டாகப் பிரிப்பது குறித்த கருத்துக் கேட்புக் கூட்டத்தைக்  கூட்டியபோதும், இப்பன்னிரெண்டு ஊராட்சிகளையும் நெல்லை மாவட்டத்திலேயே இணைக்க வேண்டும் என்றே அனைவரும் ஒருமித்து வலியுறுத்தி உள்ளனர். பொதுமக்கள் கருத்து அறியாமல், இளையரசனேந்தல் பிர்க்காவை தூத்துக்குடி மாவட்டத்தில் சேர்த்தது தவறு என்றும், இதுகுறித்து மக்கள் கருத்துகளை  அறிய உடனே நடவடிக்கை எடுக்குமாறும் அக்கூட்டத்தில் கேட்டு உள்ளனர்.  எனவே, பொதுமக்கள் கருத்து அறிய, அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவ்வாறு, பொதுமக்களின் முழுமையான விருப்பம் அறிந்து, இறுதி முடிவு  மேற்கொள்ளும்வரை இளையரசனேந்தல் பிர்க்கா பகுதி நெல்லை மாவட்டம்,  சங்கரன்கோவில் வருவாய் வட்டம், குருவிகுளம் ஒன்றியப் பகுதியிலேயே தொடர்ந்து இருந்திடும் வகையில், தக்க உத்தரவுகள் பிறப்பிக்குமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.  இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்